இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து ராஜா ராணி படம் மூலம் இயக்குனரானவர் அட்லி. முதல் படமே அவருக்கு பெரிய வெற்றியை, வரவேற்பை பெற்றுத் தந்தது. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்த இந்த படம், அட்லிக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
ராஜா ராணி படத்தை தொடர்ந்து அடுத்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என்ற 3 சூப்பர் ஹிட் படங்களை தந்தார் அட்லி. இதில் தெறி படத்தில் போலீஸ் அதிகாரி விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். மெர்சல் படத்தில் 2 கேரக்டர்களில் விஜய் நடித்திருந்தார். பிகில் படத்தில் 2 வேடங்களில் விஜய் நடித்திருந்தார். ஜோடியாக நயன்தாரா இந்த படத்தில் நடித்திருந்தார்.
இந்த மூன்று படங்களில் மாபெரும் சூப்பர் ஹிட் படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லி பாலிவுட் பக்கம் சென்றார். பதான் என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த நடிகர் ஷாருக்கான், அவரது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை அட்லிக்கு கொடுத்தார். அட்லி இயக்கத்தில் ஜவான் என்ற அந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இந்த படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். மொத்தம் 23 படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்ட படம் விமர்சிக்கப்பட்ட இந்த படம் 1150 கோடி ரூபாய் வசூலித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிப் படத்துக்கு பிறகு, இந்தியில் முக்கிய இயக்குனராக மாறிவிட்டார் அட்லி.
இதையடுத்து, அல்லு அர்ஜூன் நடிக்கும் ஒரு படத்தை சன் பிக்சர்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்ற தகவல் வெளியானது. ஆனால் அதற்கு முன்பாக அட்லி, சல்மான் கான் நடிக்கும் ஒரு இந்தி படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பாக, ஏஆர் முருகதாஸ் இயக்கும் ஒரு படத்தில் சல்மான்கான் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அட்லி இயக்கத்தில் சல்மான் நடிக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக கடந்த வாரத்தில் ஒரு தகவல் பரவியது. ஆனால் அது உண்மையல்ல, என்று தெரியவந்தது. இதையடுத்து, அந்த கேரக்டரில் கமல்ஹாசன் நடிப்பதாக சில தினங்களாக வைரலாக தகவல் பரவியது. இப்போது அதுவும் உண்மையில்லை என்று உறுதியாகி விட்டது. மும்பையில் நடந்த இந்தியன் 2 பிரமோ நிகழ்ச்சியில், தன் குருநாதர் ஷங்கருக்காக பங்கேற்றார் அட்லி. உடனே இப்படி ஒரு வதந்தி பரவியுள்ளது. அட்லி இயக்கும் படத்தில் ரஜினி, கமல் இருவருமே நடிக்கவில்லை என்பதுதான் லேட்டஸ்ட் தகவலாக உள்ளது.





