கடந்த 1975ம் ஆண்டில் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். இயக்குனர் கே பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் அவர் நடித்து தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். இப்போது அவர் தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டுகளை வெற்றிக்கரமாக நிறைவு செய்து பொன்விழா ஆண்டு சரித்திர நாயகனாக விளங்குகிறார்.
நடிகர் ரஜினியுடன் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த பல நடிகர்கள் எப்போதோ காணாமல் போய்விட்டனர். சிலர் சில ஆண்டுகளிலேயே அண்ணன் அப்பா போன்ற கேரக்டர்களுக்கு மாறிவிட்டனர். ஆனால் இப்போதும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிகர் ரஜினிகாந்த் 74 வயதிலும் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படம் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்திருக்கிறது. இப்போது ஜெயிலர் 2 படத்தில் ரஜினி நடித்து வருகிறார். அடுத்ததாக நடிகர் ரஜினி நடிகர் கமல்ஹாசன் இருவரும் 46 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைய இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ரஜினிக்கு பாராட்டு விழா நடத்தவில்லையே என தமிழ் சினிமா ரசிகர்கள் விரக்தியில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால் கூறியதாவது, எனது திருமணம் குறித்த நல்ல செய்தி இன்று வெளியாகி உள்ளது. எங்கு சென்றாலும் பலரும் என் திருமணம் குறித்து கேட்கிறார்கள். அவர்களுக்கு வேட்டி சேலை எடுத்துக் கொடுக்க வேண்டும்.
எனக்கும் சாய் தன்ஷிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்த தகவல் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. சினிமாவில் தொடர்ச்சியாக 50 ஆண்டுகளாக இருப்பது உலக சாதனை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா எடுக்கப்படும். இப்போது நடிகர் சங்க கட்டடட பணிகள் நடப்பதால் விரைவில் பாராட்டு விழா குறித்து பரிசீலிக்கப்படும்.
கடந்த 9 ஆண்டுகால உழைப்பில் உருவாகி வரும் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் இன்னும் 2 மாதங்களில் திறப்பு விழா நடத்தப்படும். நடிகர் சங்க நிர்வாகியாக அதை திறக்க கடுமையாக உழைத்து வருகிறோம். நான் டிக்கெட் வாங்கி படம் பார்ப்பவனாக விஜய் ரசிகராக, அவரின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்துகள். சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்லும் அவரது முயற்சி வெற்றி பெற வேண்டும் என்று நடிகர் விஷால் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





