கடந்த 1996ம் ஆண்டில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த படம் இந்தியன். இந்த படத்தில் சுதந்திர போராட்ட வீரர் கேரக்டரில் சேனாபதியாக கமல் நடித்திருப்பார். அவரது மகனாக மற்றொரு கமல், சந்துரு என்ற கேரக்டரில் ஆர்டிஓ அதிகாரியாக நடித்திருப்பார். லஞ்சம் ஊழல் செய்வோரை கத்தியால் குத்திக் கொல்லும் இந்தியன் தாத்தா கமல், இறுதியில் மகன் கமலையும் குத்திக் கொன்று விடுவார்.
இந்த படத்தில் இந்தியன் தாத்தா கேரக்டரில் நடித்த கமலுக்கு, 3வது முறையாக மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருது கிடைத்தது. ஆனால் அதே போல் இந்த படத்தில் மிகப்பெரிய அளவில் தனது நடிப்பாற்றலால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சுகன்யா. ஆனால் இந்தியன் 2 படத்தில் அவர் நடிக்காதது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம்தான்.
இந்தியன் படம் கடந்த 1996ம் ஆண்டில் வெளியானது. அந்த படத்தில் வரும் காட்சியில், கமல் பிறந்த ஆண்டு அதாவது சேனாபதி பிறந்த ஆண்டு 1918 எனக் குறிப்பிட்டு இருப்பவர். அப்போதைய கதைப்படி, கமலுக்கு வயது 78 என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 28 ஆண்டுகள் கழிந்த நிலையில், இந்தியன் 2 படம் வெளியாக இருக்கிறது. அப்படி என்றால், இப்போது இந்த படத்தில் வரும் இந்தியன் தாத்தா கமலுக்கு 106 வயதா என்ற கேள்வியும், சர்ச்சையும் எழுந்துள்ளது.
ஏனெனில் 106 வயது பூங்கிழவரான கமல், எப்படி இந்தியன் 2 படத்தில் பறந்து பறந்து அதிரடி சண்டைகளில் ஈடுபட முடியும், என்னதான் அவர் சிறந்த வீரராக, வர்மக்கலையில் சிறந்த ஆசானாக இருந்தாலும், 106 வயது என்பது ஒரு மனிதர் மிகவும் தளர்ந்து போய், படுக்கையில் இருக்க வேண்டிய வயது. அப்படி இருக்கையில் லாஜிக் ஆக ஷங்கர் இந்த விஷயத்தை எப்படி கவனிக்காமல் விட்டார் என பலரும் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து இயக்குனர் ஷங்கர் பிரமோ நிகழ்ச்சியில் ஒன்றில் கூறுகையில், சீனாவில் தற்காப்பு கலையில் சிறந்து விளங்கும் லீ சிங் யுவான், 120 வயதிலும் பறந்து பறந்து சண்டை போடுவார். அவரைப் போலவே சேனாபதியும், வர்மக் கலையில் சிறந்து விளங்குபவர். சுய ஒழுக்கத்துடன் சரியான உணவு, யோகா, தியானம் என்று சரியாக வாழ்க்கை வாழ்பவர்களுக்கு வயது ஒரு விஷயமே இல்லை, என்று பேசியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.
சமீபகாலமாக திமுக ஆதரவாளராக மாறியிருக்கும் கமல்ஹாசன், கள்ளக்குறிச்சிக்கு சென்ற போது, மது குடிப்பவர்களை குடிக்காதே என்று சொல்ல முடியாது. மிதமாக குடி என்று வேண்டுமானால் சொல்லலாம். விபத்து நடக்கிறது என்பதற்காக வாகன போக்குவரத்தை நிறுத்த முடியுமா, என்று திமுகவுக்கு ஆதரவாக கம்பி கட்டி பேசியிருந்தார். இப்போது இந்தியன் 2 படத்தில் கமல் வயது 106 என்ற சர்ச்சைக்கு கமலை விட ரசிகர்களின் காதுகளில் பூ மாலையே சுற்றியபடி பேசியிருக்கும் இயக்குனர் ஷங்கரை பலரும் கலாய்த்து வருகின்றனர்.





