அண்மையில் தனது மஞ்சள் வீரன் திரைப்படத்திற்கான கதாநாயகன் டிடிஎஃப் வாசனை படத்தில் இருந்து தூக்கியதாக அதன் இயக்குனர் செல்அம் அறிவித்தார். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தது. தற்போது இந்த படத்தில் புதிய நாயகனாக இடம்பெறப் போகிறார் கூல் சுரேஷ்.
youtube மூலம் தனக்கென பெரிய கூட்டத்தை சேர்த்தவர் டிடிஎஃப் வாசன். பைக் டூர் மூலம், தனக்கான பட்டாளத்தை சேர்த்த அவர் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அதனுடன் சேர்ந்து அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கி வந்தார். காஞ்சிபுரம் அருகே அவர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற போது விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியானது.
தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரது ஓட்டுநர் உரிமத்தை 20 ஆண்டுகளுக்கு ரத்து செய்தது. இருப்பினும், டிடிஎஃப் வாசன் சர்ச்சையில் மட்டும் விலகிய பாடில்லை.
அடுத்தடுத்து ஏதாவது ஒரு வழக்கில் அவர் மாட்டிக்கொண்டு வந்த சூழலில், டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் என்னும் திரைப்படத்தில் நடிக்க போவதாக அறிவிக்கப்பட்டது. அதில் புல்லட்டில் வீலிங் செய்து, கையில் சூலாயுதத்துடன் வெறித்தனமாக போஸ் கொடுத்தார் டிடிஎஃப் வாசன். இதனால் அவரை சுற்றி இருக்கும் 2 கே கிட்ஸ்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.
திருவிக பூங்கா என யாருக்குமே தெரியாத திரைப்படத்தை இயக்கிய செல்அம் தான், மஞ்சள் வீரனை இயக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென டிடிஎஃப் வாசனை படத்திலிருந்து விலக்குவதாக இயக்குனர் அறிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே பயங்கர மோதல் எழுந்தது. இருவரும் மாறி மாறி ஆம்பளையாக இருந்தால் நேரில் வந்து மோது என மல்லுக்கட்டினர்.
இப்படியான சூழலில் தான் திடீர் திருப்பமாக மஞ்சள் வீரன் திரைப்படத்தில் புதிய கதாநாயகன் தொடர்பான அறிவிப்பு கசிந்து இருக்கிறது. அது வேறு யாரும் அல்ல ஒவ்வொரு திரைப்படத்தையும் பார்த்துவிட்டு, தனக்கே உண்டான பாணியில் லொள்ளு செய்யும் கூல் சுரேஷ் தான், அடுத்த மஞ்சள் வீரனாக களமிறங்க போகிறார். இது தொடர்பாக இயக்குனர் மற்றும் கூல் சுரேஷ் இருவரும் பூஜை செய்து மாலையிட்ட புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து, இயக்குனர் மீது பூக்களை தூவியும் கூல் சுரேஷ் சேட்டை கொடுத்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகி இருக்கிறது.





