2025 ஆம் ஆண்டு தொடங்கி முதல் ஆறு மாதங்கள் கடந்து இருக்கும் சூழலில் தற்போது, தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படமாக அமைந்திருக்கிறது கூலி. லியோ திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். ஏற்கனவே கூலி சூட்டிங் தொடங்குவதற்கு முன்பே பல்வேறு தகவல்களை இயக்குனர் பகிர்ந்திருந்தார்.
அதில், தனது முந்தைய திரைப்படங்களைப் போன்று போதை பொருட்களை வைத்து இந்த படம் எடுக்கப்படாது என்றும், தனது திரையுலக வாழ்வில் சோதனை முயற்சியாக இதனை எடுக்க இருப்பதாகவும் கூறினார். அப்போதே கூலி திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. சென்றமுறை லியோ திரைப்படத்தின் சூட்டிங் தொடங்கும் போது அது எப்போது வெளியாகும் என்று தெரிவித்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.
ஆனால் இந்த முறை அவ்வாறு செய்யவில்லை. சொல்லப்போனால் திரைக்கதையை வடிவமைப்பதிலேயே அவர் ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து கூலி திரைப்படத்தின் சூட்டிங், ஹைதராபாத்தில் தொடங்கி விசாகப்பட்டினத்தில் மும்முரமாக நடைபெற்று வந்தது. துறைமுகத்தை சுற்றியே இந்த திரைப்படத்தின் கதை நகர்வதாக சொல்கிறார்கள்.
இதற்காக விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்ட செட் போட்டு படத்தை எடுத்திருக்கிறார்கள். படத்தில் தேவா என்னும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதுபோக தெலுங்கில் இருந்து நாகர்ஜுனா, கர்நாடகாவில் இருந்து உபேந்திரா, மலையாளத்திலிருந்து சோபின் சாஹிர் மற்றும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில், படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் பூஜா ஹெக்டே நடனமாடி இருக்கிறார். ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து சிக்கிடு பாடல் வெளியாகியிருக்கிறது. இதன் ப்ரோமோ சூட்டிங்கில், அனிருத், நடன இயக்குனர் சாண்டி மற்றும் டி ராஜேந்தர் ஆகியோர் பங்கேற்று அசத்தியிருந்தனர். பாடலும் ஹிட் ஆகியிருக்கிறது.
கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இன்னும் அதற்கு ஒன்றரை மாதங்களே இருப்பதால் படக்குழுவினர் அதன் பணிகளில் பிஸியாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக வரும் 27ஆம் தேதி கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





