இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நட்சத்திர நடிகர்கள் அமிதாப் பச்சன் பிரபாஸ் கமல்ஹாசன் நடிகை தீபிகா படுகோனே திஷா பதானி உள்ளிட்டோர் நடித்த படம் கல்கி 2898 ஏடி. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வைஜெயந்தி மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரித்திருந்தது.
தற்போது கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் கல்கி 2ம் பாகத்தில் இருந்து நடிகை தீபிகா படுகோனே நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமே சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்தியது.
குறைவான பணி நேரம், 25 சதவீத சம்பளம் உயர்வு, அவரது குழுவினருக்கான தங்குமிடம் ஆகியவற்றில் தயாரிப்பு நிறுவனத்துக்கும் நடிகை தீபிகா படுகோனேவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் கல்கி படத்திலிருந்து நீக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இப்போது 2ம் பாகத்தில் தீபிகா படுகோனே நடிக்க வேண்டிய கேரக்டரில் யார் நடிக்கிறார் என்ற அதிகாரபூர்வமான தகவல் இதுவரை படக்குழு தரப்பிலிருந்து வெளியாகவில்லை.
இந்நிலையில் அந்த கேரக்டரில் பாகுபலி நாயகி நடிகை அனுஷ்கா ஷெட்டியை நடிக்க வைக்க வேண்டும் என்று ரசிகர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது. நடிகர் பிரபாஸூக்கும் அனுஷ்காவுக்கும் நல்ல ஜோடி பொருத்தம் உள்ளது. ஏற்கனவே பாகுபலி படத்தில் அந்த ஜோடியை இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடி வரவேற்றனர்.
அதனால் பிரபாஸூக்கும் அனுஷ்காவுக்கும் இடையே கெமிஸ்ட்ரி எப்போதுமே சிறப்பானதாக இருப்பதால் அவர் கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக நடிப்பது சிறந்த தேர்வாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதே நேரத்தில் நடிகை அனுஷ்கா இப்போது உடல் பருமனான தோற்றத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான காதி படத்தில் அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் சிஜி மற்றும் விஎப்எக்ஸ் தொழில்நுட்பத்தால் அவர் ஒல்லியாக திரையில் காட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் கல்கி 2898 ஏடி படத்திலும் அனுஷ்கா ஷெட்டியை நடிக்க வைத்தால், உடல் பருமனாக உள்ள அவரை தொழில்நுட்பத்தில் ஒல்லியாக காட்டவேண்டிய கட்டாயம் படக்குழுவுக்கு ஏற்படும். அதனால் அனுஷ்காவை கல்கி படக்குழு தேர்வு செய்வார்களா அல்லது பிரபலமாக உள்ள மற்ற நடிகை யாராவது கல்கி படத்தில் நடிகர் பிரபாஸூக்கு ஜோடி சேர்ப்பார்களா என்பதில் குழப்பம் நிலவுகிறது.





