ரஜினிகாந்தின் இரண்டு மகள்களில் மூத்த மகளாகிய ஐஸ்வர்யாவுக்கும், தனுஷிற்கும் 2004 ஆம் ஆண்டு திருமணமானது. இந்த தம்பதியருக்கு, யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதியர், மனக்கசப்பு காரணமாக 2022 ஆம் ஆண்டு பிரிந்தனர். இதனை தனுஷ் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இப்படியான சூழலில், தனுஷ் தொடர்ந்து தனது திரைப்படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் மீண்டும் இயக்கத்தின் பக்கம் தனது பார்வையை திருப்பி இருக்கிறார். அவர் ஏற்கனவே தனது முன்னாள் கணவர் தனுசை வைத்து மூன்று திரைப்படத்தை இயக்கியிருந்தார். அனிருத் இசையில் உருவாகி இருந்த அந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றது.
படத்தின் முதல் பாதி நன்றாக இருந்ததாகவும் இரண்டாம் பாதி சுமாராக இருந்ததாகவும் பலர் அற்புத கூறினர். இருப்பினும் அதன் இடம்பெற்ற பாடல்கள் இன்று வரை ரசிகர்களின், விருப்ப பாடல்களாக இருக்கின்றன. இந்த திரைப்படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து, வை ராஜா வை திரைப்படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. விறுவிறுப்பான கதைக்களத்தில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டாலும் அன்றைய தேதியில் சுமாரான வரவேற்பையே இது பெற்றது.
இந்த நிலையில் தற்போது, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவர் லால் சலாம் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில் தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். அவருக்கு மொய்தின்பாய் எனும் கதாபாத்திரத்தை மகள் ஐஸ்வர்யா கொடுத்திருக்கிறார்.
கிரிக்கெட் விளையாட்டையும் மதப் பிரச்சினையையும் மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இது திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா, தனது தந்தை ரஜினி சங்கி இல்லை என்றும், மத நல்லிணக்க எண்ணம் கொண்டவரால் மட்டுமே இந்த திரைப்படத்தில் நடிக்க முடியும் என்றும் கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் லால் சலாம் திரைப்படம், வரும் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்திற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழை அளித்துள்ளது. அண்மையில் இதன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், அதனை தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார் நடிகர் தனுஷ். மேலும் படக்குழுவினருக்கு அவர் வாழ்த்துக்களையும் கூறி இருக்கிறார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.





