லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்து பிரபலமானவர் யோகிபாபு. அதன் பிறகு சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்த அவர் யாமிருக்க பயமேன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். அதன் மூலம் பிரபலமானாலும் பன்னி மூஞ்சி வாயன் என்று உருவ கேலி செய்யப்பட்டது ரசிகர்களில் ஒருதரப்பினரிடம் விமர்சனத்தை சந்தித்தது. அதேசமயம் யோகிபாபு திறமையான நடிகர் என்பது அந்தப் படத்தின் மூலம் உறுதியானது.
அதனையடுத்து விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோரின் படங்களில் காமெடி ரோல்கள் செய்ய ஆரம்பித்தார். அது பெரும் வரவேற்பைப் பெற தமிழின் முன்னணி காமெடி நடிகராக வலம் வர ஆரம்பித்தார். சூழல் இப்படி இருக்க நெல்சன் திலீப்குமார் இயக்கிய முதல் படமான கோலமாவு கோகிலா படத்தில் நயன் தாராவுக்கு ஜோடியாக நடித்த்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது.
கோலமாவு கோகிலாவின் வெற்றிக்கு பிறகு ஒரு சில படங்களில் காமெடி ரோலில் நடித்தாலும் ஹீரோவாக நடிப்பதிலும் கவனம் செலுத்தினார். அப்படி அவர் நடித்த கூர்கா உள்ளிட்ட படங்கள் தோல்வியை சந்தித்தன. நிலைமை இப்படி இருக்க மடோன் அஸ்வினின் இயக்கத்தில் மண்டேலா படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக நடித்தார். அந்தப் படமும் மெகா ஹிட்டாகி படம் தேசிய விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது.
அந்தப் படத்துக்கு பிறகு பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் யோகிபாபுவின் காமெடி இடையில் ரசிக்கும்படி இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. அத விமர்சனத்தை அடித்து நொறுக்கும் விதமாக சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் யோகியின் காமெடி இருந்தது. அவரது கவுண்ட்டர்கள் ஒவ்வொன்றும் ரசிக்கும்படியே அமைந்தன. இந்தப் படத்தை தவிர்த்து ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படத்திலும் நடித்திருக்கிறார். இந்தப் படத்திலும் அவரது காமெடி ஒர்க் அவுட் என்று நம்பப்படுகிறது.
இதற்கிடையே ஏற்கனவே சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் நடித்தவர் மீண்டும் அவருடன் ஜவான் படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி தோனி தயாரித்திருந்த லெட்ஸ் கெட் மேரிட் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதனால் இன்னமும் தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகிபாபுதான் என்பது உறுதியானது.
இந்நிலையில் அவர் தீவிர முருகன் பக்தர். அதன் காரணமாக தமிழ்நாட்டில் இருக்கும் முருகன் கோயில்களுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அந்தவகையில் சிறுவாபுரியில் இருக்கும் முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அதன் பிறகு அங்கு இருந்த அர்ச்சகர் ஒருவரிட கை கொடுப்பதற்காக சென்றார். ஆனால் அந்த அர்ச்சகரோ கையெல்லாம் ஒன்றும் கொடுக்க வேண்டாம் என்பது போல் செய்கை செய்து கை கொடுக்க மறுத்துவிட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பிரபலமான நடிகர் தீண்டாமை கொடுமையை அனுபவித்துவிட்டாரே என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். மேலும் அதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.





