முன்னணி நடிகர்கள் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களில் சில விதிமுறைகள் தானாகவே பின்பற்றப்படும். குறிப்பாக எம்ஜிஆர் நடித்த காலகட்டத்தில் அவரது முன்னிலையில் யாரும் சிகரெட் புகைக்க மாட்டார்கள். அவருக்கு தெரியாமல் ஷெட்டுக்கு வெளியே சென்று புகைப்பதுதான் வழக்கம். ஆனால் காமெடி நடிகர் நாகேஷூக்கு மட்டும் இதில் விதிவிலக்கு உண்டு.
ஏனெனில் அவர் அடிக்கடி சிகரெட் பிடிக்க வெளியே சென்றதால், ஷூட்டிங் அடிக்கடி தடைபட்டது. இதையறிந்த எம்ஜிஆர், நாகேஷ் அதிக நேரம் சிகரெட் பிடிக்காமல் இருக்க முடியாது. அதனால் அவரை சிகரெட் பிடிக்க அனுமதியுங்கள் என்று தயாரிப்பாளர் இயக்குனரிடம் பரிந்துரை செய்திருக்கிறார். அதே போன்ற ஒரு அனுபவம் இயக்குனர் விக்ரமனுக்கும் விஜயகாந்த் பட ஷூட்டிங்கின் போது கிடைத்திருக்கிறது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, வானத்தை போல படத்துக்கு பிறகு என்னுடைய டைரக்ஷனில் விஜயகாந்த் நடித்த படம் மரியாதை. இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். 46 நாட்களில் அந்த படத்தை நடித்துக்கொடுத்தார். மரியாதை படத்தில் நடித்த போது அவர் அரசியல் தலைவராக இருந்தார். அவரை பார்க்க கட்சியினர் வந்துக்கொண்டே இருப்பார்கள்.
ஆனால் படப்பிடிப்பு தளத்துக்குள் கட்சியினரை அவர் அனுமதிக்க மாட்டார். மதியம் லஞ்ச் பிரேக் டைம் மத்த இடைவேளை நேரங்களில் ஷெட்டுக்கு வெளியே காத்திருக்கும் கட்சியினரை போய் பார்த்து பேசிவிட்டு வந்துவிடுவார். கட்சியினர் மூலமாகவே மதியம் யூனிட்டில் உள்ள அனைவரும் சாப்பாடு தயாராகி விடும். சிக்கன் மட்டன் மீன் காடை கவுதாரி என அத்தனை நான்வெஜ் அயிட்டங்களும் இருக்கும்.
எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளதால், வானத்தை போல ஷூட்டிங் ஸ்பாட்டில் சிகரெட் பிடித்துக்கொண்டே இருப்பேன். விஜயகாந்த் இருந்தாலும் அவர் முன்னாடியே சிகரெட் பிடிப்பேன். அவரும் அதை கண்டுகொள்ள மாட்டார். ஆனால் மரியாதை படம் எடுத்த போது அவர் அரசியல் தலைவராக இருந்தார். அவர் முன்னால் சிகரெட் பிடித்தால் அது நன்றாக இருக்காது என்று தோன்றியது.
அதுமட்டுமின்றி அவரது கட்சிக்காரர்கள் முன்னிலையில் அரசியல் தலைவராக உள்ள அவரது முன்னால் சிகரெட் பிடித்தால் அவரது கட்சியினரே தப்பாக நினைப்பார்களே என்றும் தோன்றியது. அதனால் விஜயகாந்துக்கு தெரியாமல் மறைவான இடத்தில் நின்று சிகரெட் பிடித்தேன். இதை அவர் கவனித்து விட்டு, ஏன் சார் நீங்க, எப்பவும் போல சிகரெட் பிடிங்க இதுல என்ன இருக்குது என்று யதார்த்தமாக சொன்னார் என்று இயக்குனர் விக்ரமன் கூறியிருக்கிறார்.





