கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே திரைப்படத்தின் இயக்கத்தை தாண்டி நடிகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தினார். இந்தத் திரைப்படம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதுமட்டுமல்லாமல், gen z கால இளைஞர்களின் ஃபேவரைட் நடிகராகவும் மாறினார் பிரதீப் ரங்கநாதன்.
இதனைத் தொடர்ந்து முழு நேர ஹீரோவாக மாறிய பிரதீப் ரங்கநாதன், தனது நண்பர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் திரைப்படத்தில் நடித்தார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனுக்கு அடுத்ததாக வெளிவந்திருக்கிறது டியூட் திரைப்படம். முந்தைய திரைப்படம் போன்று இதுவுமே ஜாலியாக இருக்கும் என்று கருதிதான் திரையரங்குகளுக்கு அவரது ரசிகர்கள் சென்றார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போலவே அதே கொண்டாட்டம் படத்தில் இருந்தாலும், சமூகப் பிரச்சனையையும் சற்று ஓங்கி உரைத்து கூறியது டியூட்.
ஆணவக் கொலைக்கு எதிராக இந்த திரைப்படத்தில் அழுத்தமான வசனங்களை பதிவு செய்திருந்தார் இயக்குனர் கீர்த்தீஸ்வரன். அதற்கு ஏற்றது போலவே திரைக்கதையை அமைத்திருக்க, தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருந்தார் பிரதீப் ரங்கநாதன். சொல்லப்போனால் இவ்வளவு கருத்துள்ள திரைப்படத்தில் அவரை நடித்ததற்கே பாராட்ட வேண்டும் என்று பலரும் வாழ்த்தினார்கள்.
இது ஒரு பக்கம் இருந்தாலும், விமர்சனம் என்று பார்க்கையில் கலவையான கருத்துக்களைதான் இது பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியில், பெரும் லாபம் உள்ள திரைப்படமாகவே டியூட் பார்க்கப்படுகிறது. ஐந்து நாட்களில் மட்டும் 95 கோடி வசூலை இந்த திரைப்படம் குவித்துள்ளது. இதன் வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசிய கீர்த்தீஸ்வரன், பலரும் இந்த திரைப்படம் விவாதத்தை உருவாக்கி இருப்பதாக பேசினார்கள்..
இது தமிழ்நாடு. இங்கு நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். அந்தப் பெரியவரும் இருந்திருக்கிறார். அவரைப் பின்பற்றியவர்கள் நாங்கள். இது தொடர்பான கருத்துக்களை நாங்கள் சொல்லிக் கொண்டே இருப்போம். ஆணவ கொலைக்கு எதிராக இந்த திரைப்படத்தின் இறுதியில் ஒரு வசனம் வரும். முதலில் அதை வைக்க வேண்டும் என்ற ஐடியாவிலேயே நாங்கள் இல்லை. அந்த சமயத்தில்தான் திருநெல்வேலியில் கவின் கொலை நிகழ்ந்தது எங்களை கஷ்டப்படுத்தியது. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று பிரதீப் ரங்கநாதன் என்னை ஊக்கப்படுத்தினார். அதன் பிறகே அந்த வசனம் கிளைமாக்ஸில் இருந்தது என்று தெரிவித்துள்ளார்.





