மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து கைதி மாஸ்டர் விக்ரம் லியோ கூலி ஆகிய படங்களை இயக்கினார். இதில் கைதி விக்ரம் படங்கள் பெரிய பிளாக்பஸ்டர் படங்களாக இருந்தன. ஆனால் லியோ கூலி படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.
குறிப்பாக கூலி படம் மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. இப்போது அடுத்ததாக ஐகான் ஸ்டார் அல்லு அ்ஜூன் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்ய உள்ள நிலையில் அவர் கூறியதாவது, கூலி படத்துக்கு ஏ சான்றிதழ் வாங்கியது என்னுடைய நோக்கம் இல்லை.
கூலி படத்துக்கு சென்சார் போர்டு 35 கட் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. சினிமாவில் வன்முறை என்பதை விட அதனை ஆக்சனாக மட்டுமே நான் பார்க்கிறேன். என் படங்களில் வன்முறை இருப்பதாக சொல்கிறார்கள். எனக்கும் ஒரு சமூக பொறுப்பு வேண்டும் என்கிறார்கள்.
எனக்கு சமூக பொறுப்பு உள்ளது. அதேபோல் படம் பார்ப்பவர்களுக்கும் ஒரு பொறுப்பு வேண்டும் அல்லவா? அரசியலுக்கும் எனக்கும் தொடர்பில்லை. விஜய் பிரச்சாரத்திற்கு அழைத்தால் செல்ல மாட்டேன். கூலி 35 நாட்களுக்கு மேல் ஓடியது. லாபகரமான படம் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. ரஜினி கமல் இருவரையும் சமூக வலைதளத்தில் அன்-பாலோ பண்ணிட்டேன்னு சொல்லி விமர்சனங்கள் வந்தது.
அவர்கள் இருவருடனும் இணைந்து படம் பண்ணியதே பெரும் பாக்கியம். அப்படி இருக்கையில் அவர்களை எப்படி நான் அன்- பாலோ செய்வேன்? அது உண்மை இல்லை. இது போன்ற விஷயங்களை என்னிடம் என் குழுவினரிடமும் கேட்டுவிட்டு தகவலை வெளியிட வேண்டும்.
போதைப் பொருட்கள் வேண்டாம் என்று என்னால் முடிந்த அளவுக்கு உரக்கச் சொல்கிறேன். என் படங்களில் போதைக்கு எதிராக தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகிறேன். எனது படங்களில் போதை பொருள் காட்டுவதால் அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது என்றால், அதனை நான் படங்களில் நிறுத்திவிட்டால் நிலைமை மாறிவிடும் என்றால் நானும் நிறுத்திக் கொள்கிறேன் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.





