தமிழ் சினிமாவில் மிகவும் கவனம் பெற்ற இயக்குனராக உள்ளவர் பா ரஞ்சித். அட்டக்கத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர் மெட்ராஸ் கபாலி காலா தங்கலான் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். சாதியம் சார்ந்த கருத்துகளை தனது படங்களில் முன்வைப்பவர். சாதிகள் பெயரால் சமுதாய ஒடுக்குமுறைகளை கடுமையாக எதிர்க்கும் ஒரு சினிமா படைப்பாளியாக பா ரஞ்சித் இருந்து வருகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உங்களில் ஒருவன் என்ற நேர்காணலில் கேள்விக்கு பதில் சொல்வது போல் ஒரு வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் மத்திய பட்ஜெட், கல்வி, கூட்டணி கட்சிகள், இந்தியா கூட்டணி குறித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து, பாலியல் குற்றங்கள், மணிப்பூர் விவகாரம் குறித்து ஸ்டாலின் அதில் பேசியிருந்தார்.
இது சார்ந்த கேள்விகளுக்கு பதில் சொல்வது போல் இந்த வீடியோவில் அவர் தனது கருத்துக்களை பதிவு செய்திருந்தார். உங்களில் ஒருவன் அந்த நேர்காணல் வீடியோ வெளியான நிலையில் வீடியோவை பகிர்ந்துள்ள இயக்குனர் பா ரஞ்சித் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் சாதிய வன்கொடுமைகள் குறித்து கேள்விகள் எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் பா ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதிய ரீதியான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் பட்டியலின மக்களின் மீது நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தபட்சம் இப்படி நடந்து கொண்டு இருக்கிறது என்பதையாவது நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?
தங்களது அமைச்சரைவின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடத் துறை அமைச்சர், அதிகாரிகளுக்கும் எம்எல்ஏ, எம்பி களுக்கும் இதைவிட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால், நாங்கள் வேண்டுமானால் சமீப காலங்களில் பட்டியல் இனத்தவர் மீது நிகழ்த்தப்பட்ட வன் கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம் என்று அதில் இயக்குனர் பா ரஞ்சித் காட்டமாக கூறியிருக்கிறார்.
திமுக அமைச்சரவையில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்களை தடுக்காமல், அப்படி நடந்த சம்பவங்களின் மீது உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் உங்களது திமுக அரசின் அமைச்சர், அதிகாரிகள் எம்பி எம்எல்ஏக்கள் அலட்சியமாக உள்ளனர். அதனால் நாங்களே அதுபற்றிய உண்மைகளை உங்களுக்கு அறிக்கையாக தரட்டுமா என இயக்குனர் பா ரஞ்சித், முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாக கேட்டிருப்பது சினிமா, அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





