நடிகர் விஜய் நடிப்பில் நேற்று வெளியாக வேண்டிய ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் வெளியாகவில்லை. தமிழகம் கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற இந்திய மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகவில்லை என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பலத்த விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதமே ஜனநாயகன் படத்தை தணிக்கைக்குழு பார்வைக்கு அனுப்பிய நிலையில் வேண்டும் என்றே சான்றிதழ் வழங்காமல் தாமதித்து இழுத்தடித்து கடைசி வரை இந்த படத்தை வெளிவிடாமல் தணிக்கை வாரியம் தடுத்து விட்டதாகவே புகார் எழுந்துள்ளது. மத்திய அரசின் அழுத்தம்தான் இதற்கு காரணம் என்றும் பகிரங்கமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிடி ஆஷா இந்த வழக்கை விசாரித்த நிலையில் ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உடனே உத்தரவிட்ட நிலையில் சென்சார் போர்டு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தது. அதில் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம் வரும் 21ம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளது. அதனால் ஜனநாயகன் படம் ரிலீஸ் 2 வாரங்களுக்கு மேல் தள்ளிப் போய்விட்டது. அதற்கு பிறகும் எப்போது ரிலீஸ் என்பது தெரியாது.
இந்த சூழ்நிலையில் இதுகுறித்து இயக்குனர் பா ரஞ்சித் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, ஜனநாயகன் படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்பட தணிக்கை துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்திய கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது.
அதேபோல் பராசக்தி திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் போன்றே என் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கும் நீலம் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதை பலமுறை நான் பகிர்ந்து இருக்கிறேன். ஆனால் ஜனநாயகன் படத்திற்கு நிகழ்ந்திருப்பது என்பது தணிக்கை துறை தவறான வழிகாட்டுதலுக்குள் சிக்கி இருப்பதை காட்டுகிறது.
மேலும் மாற்றுக் குரல்கள் வராமல் தடுப்பதற்கான வேலையை மிகத் தீவிரமாக கடைபிடிக்கின்ற இது போன்ற மோசமான போக்கை வன்மையாக கண்டிக்க வேண்டும். படைப்பு சுதந்திரம் பாதுகாக்கவும் வரும் காலங்களில் மத்திய தணிக்கை துறை சுதந்திரமாக செயல்படவும் குரல் எழுப்புவோம் என்று இயக்குனர் பா ரஞ்சித் தனது எக்ஸ் பதிவில் கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.





