தமிழ் சினிமாவில் பல வெள்ளிவிழா படங்களை கடந்த 1980 90களில் தந்தவர் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன். பயணங்கள் முடிவதில்லை அவர் இயக்கிய முதல் படம் பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து வைதேகி காத்திருந்தாள் அம்மன் கோவில் கிழக்காலே நான் பாடும் பாடல் குங்குமச்சிமிழ் மெல்லத் திறந்தது கதவு ராஜாதி ராஜா உள்ளிட்ட பல படங்களை அவர் டைரக்ட் செய்திருக்கிறார்.
மேலும் இயக்குனராக மட்டுமின்றி பல படங்களில் ஆர் சுந்தர்ராஜன் நடிகராகவும் அசத்தி இருக்கிறார். ஒயிலாட்டம் பொண்டாட்டி ராஜ்ஜியம் காலம் மாறிப்போச்சு திருமதி பழனிசாமி தெற்கு தெரு மச்சான் லிங்கா உள்ளிட்ட ஏராளமான படங்களில் அவர் நடித்திருக்கிறார். சில டிவி சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் ஆர் சுந்தர்ராஜன் கூறியதாவது, நான் டைரக்ட் செய்த நான் பாடும் பாடல் படத்துக்கு தமிழக அரசு விருது கிடைத்தது. அப்போது கோவை தம்பி எம்ஜிஆர் உங்களை பார்க்க கூப்பிடுகிறார் என்றார்.
நான் அவரை பார்க்க நாளை காலையில் போக வேண்டும். அவர் வரச்சொல்லி இருக்கிறார் என்றவுடன் எனக்கு கருக் என்று இருந்தது. ஏன்னா எம்ஜிஆரை பார்க்க தோட்டத்துக்கு போனோம் என்றால் 3 விஷயங்கள் நடக்கும். ஒண்ணு சாப்பிட்டுட்டு வரணும். இல்லேன்னா பணம் வாங்கிட்டு வரணும். இல்லேன்னா உதை வாங்கிட்டு வரணும்.
இந்த மூணுமே நமக்கு தேவையில்லை. பணம் இருக்குது. எல்லாமே இருக்குது. ஆனாலும் அவரை பார்க்க போவோம். அடிக்கிற கைதான் அணைக்கும் என்று சொல்வாங்க. அடிச்சு அணைச்ச ஒரே கை எம்ஜிஆரின் கை தான். அவர் ஒருமுறை அடித்து விட்டால் அவர் அடுத்து மினிஸ்டர்தான்.
அப்படி அடிச்சு அணைச்ச கை அது எம்ஜிஆர் கை தான். இதை எல்லாம் கேள்விப்பட்டுதான் நாம அவரை பார்க்க போனோம். போன உடனே விருந்து கொடுத்தார். சாப்பிட்டேன். சிவாஜி படங்களை மட்டுமே பார்த்துட்டு இருந்த எங்களை எல்லாம் எம்ஜிஆரை பார்க்க வைத்ததே பெரிய சந்தோஷமாக இருந்தது என்று அந்த விழாவில் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் பேசியிருக்கிறார்.





