வருகிற நவம்பர் 14ம் தேதி சூர்யா நடித்த கங்குவா படம் ரிலீஸ் ஆகிறது. சூர்யா நடிப்பில் படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டதால், கங்குவா படத்துக்காக சூர்யா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள கங்குவா படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்றும் படக்குழுவினர் உறுதியாக நம்புகின்றனர்.
இதையடுத்து ஆர்கே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படம் உருவாகிறது. ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள சூர்யா 45 படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். முதன்முறையாக சூர்யா, ஏஆர் ரகுமான், ஆர்ஜே பாலாஜி என்ற புதிய கூட்டணியில் உருவாகும் இந்த படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கங்குவா இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் ஆர் ஜே பாலாஜியிடம் சூர்யா 45 படம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், என்னிடம் ஒரு உதவி இயக்குனர் வந்து, ஒரு சந்தேகம் கேட்டார். இரண்டு மூன்று பெரிய இயக்குனர்களின் பெயர்களை எல்லாம் சொல்லி, இவங்களோட கதையை எல்லாம் ரிஜெக்ட் பண்ணின நடிகர் சூர்யா, உங்கள் கதையை எப்படி செலக்ட் பண்ணினார் என்று என்னிடம் கேட்டார்.
அதற்கான பதில், சூர்யா சார் என்னையும் ஸ்கிரிப்ட்டையும் நம்பியதுதான். அந்த நம்பிக்கைக்கு நன்றி. அன்பான ரசிகர்களே, ஒரு விஷயம் உங்களுக்கு சொல்கிறேன். என்னிடம் டிவிட்டரில், வாட் ஆர் யூ குக்கிங் ப்ரோ என்று பலரும் கேட்கின்றனர். அதற்கு பதில், அடுத்த வருஷம் பயங்கரமா செம்ம மாஸா சமைச்சு தரப்படும், அதுக்கு நான் கேரண்டி என்று ஆர்ஜே பாலாஜி கூறியிருக்கிறார்.
சூர்யா 45 படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜியின் இந்த அப்டேட் சூர்யா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது. இதன் மூலம் சூர்யா நடிக்கும் அவரது 45வது படம் அடுத்த 2025ம் ஆண்டில் வெளியாகும் என்பதும் தெரிய வந்துள்ளது. சூர்யா இப்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இயக்குனர் ஆர்ஜே பாலாஜி முதலில் காமெடி நடிகராக இருந்து பின்பு ஹீரோவாக மாறியவர். பின்பு மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களில் இயக்குனராக தன் திறமையை வெளிப்படுத்தினார். இப்போது சூர்யா 45 படத்தை இயக்க ஆயத்தமாகி விட்டார். ஆனால் இந்த படத்தின் கதை, நடிகர் விஜய் நடிக்க இருந்த கதை என்று கூறப்படுவதால், சூர்யா நடிப்பில் இது பெரிய வெற்றியை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





