தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் மகன்கள் நடிகர்களின் மகன்கள் கலை வாரிசுகளாக ஹீரோக்களாக அறிமுகமாவது வழக்கமாக நடந்து வருகிறது. இதில் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். அவரது தாத்தா எஸ்ஏ சந்திரசேகர் ஒரு பிரபல இயக்குனர் என்பதால் தாத்தா வழியில் பேரன் வந்திருக்கிறார்.
வழக்கமாக நடிகர்களின் வாரிசுகள் சினிமாவுக்குள் வந்தாலும் திறமை இருந்தால் மட்டுமே அவர்களால் ஜெயித்து நிலைத்து நிற்க முடியும். உதாரணமாக பிரபு கார்த்திக் விஜய் பிரசாந்த் சூர்யா கார்த்தி தனுஷ் போன்ற ஒரு சில கலை வாரிசுகள்தான் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கின்றனர்.
அதே நேரத்தில் நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜ் முரளி மகன் அதர்வா, பிரபு மகன் விக்ரம் பிரபு போன்றவர்கள் இன்னும் தடுமாறி கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களால் பெரிய அளவில் சினிமாவில் வரவேற்பை பெற முடியவில்லை. விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நடித்த பீனிக்ஸ் படம் கூட பெரிய வரவேற்பை பெறவில்லை.
இந்த வரிசையில் இப்போது இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித் விரைவில் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஏற்கனவே ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் மாவீரன் நேசிப்பாயா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் நடித்தும் வருகிறார். இப்போது ஷங்கரின் மகனும் நடிக்க வந்துவிட்டார்.
ஏற்கனவே ஷங்கர் இயக்கிய சில படங்களில் உதவி இயக்குனராக பணிசெய்தவர் அர்ஜித். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனரின் மகன் எந்த எந்த பந்தாவும் இல்லாமல் மற்ற உதவி இயக்குனர்களை போலவே பணிவாகவும் அடக்கமாகவும் அவர் நடந்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது. அத்துடன் இயக்குனர் ஏஆர் முருகதாஸிடமும் அவர் உதவி இயக்குனராக சில படங்களில் பணிசெய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மதராஸி படத்தில் அர்ஜித் பணி செய்திருக்கிறார்.
இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லி. அவர் இயக்கிய படங்களில் அட்லியிடம் உதவி இயக்குனராக பணி செய்தவர் சிவா. இப்போது சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஷங்கர் மகன் அர்ஜித் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் மிக விரைவில் துவங்க உள்ளதாகவும், அதற்காக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.





