நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் இந்தப் படத்தின் இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன், அஜித்குமாரின் அடுத்த படத்தையும் இயக்குகிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார்.
இது நடிகர் அஜீத்குமாரின் 64வது படமாகும். இப்போது வெளிநாடுகளில் நடந்து வரும் கார் ரேஸில் நடிகர் அஜீத்குமார் பிஸியாக இருக்கிறார். வருகிற நவம்பர் மாதம் ஏகே 64 படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. அடுத்த ஆண்டு மே 1ம் தேதி அல்லது ஜூன் மாதத்தில் இந்த படம் ரிலீஸாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் 260 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.
இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஸ்ரீ கணேஷ். இவர் கடந்த 2017ம் ஆண்டில் எட்டு தோட்டாக்கள் என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு நடிகர் அதர்வா நடித்த குருதியாட்டம் என்ற படத்தையும் ஸ்ரீ கணேஷ் இயக்கினார். இப்போது ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் 3 பிஎச்கே என்ற படம் உருவாகியுள்ளது.
நடிகர்கள் சித்தார்த் சரத்குமார் மற்றும் தேவயானி யோகிபாபு மீதா ரகுநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள 3 பிஎச்கே படம் வருகிற ஜூலை 4ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் ஏகே 64 படத்திற்கு பிறகு நடிகர் அஜீத்குமார் நடிக்கும் படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கப் போவதாக சமீபத்தில் இணையத்தில் ஒரு தகவல் வைரலானது. இது குறித்து 3 பிஎச்கே படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் ஸ்ரீ கணேஷிடம் கேட்கப்பட்டது.
அப்போது இயக்குனர் ஸ்ரீ கணேஷ் கூறியதாவது, இது முற்றிலும் தவறான தகவல். இப்படி ஒரு விஷயமே நடக்கவில்லை. அஜீத்குமார் படத்தை நான் இயக்கப் போவதாக வந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது. அஜீத்குமார் ஒரு மிகப்பெரிய நடிகர்.
அதனால் அவர் நடிக்கும் படத்தை இயக்க வேண்டும் என்றால் நானும் வளர வேண்டும். அந்த அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை என்று நினைக்கிறேன். இன்னும் நிறைய தரமான படங்களை இயக்கி என்னுடைய தகுதியை வளர்த்துக்கொண்டு அதன்பிறகு தான் அஜீத்குமாரை சந்தித்து கதை சொல்லி அவர் நடிக்கும் படத்தை இயக்குவேன் என்று இயக்குனர் ஸ்ரீ கணேஷ் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





