தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் கலைப்புலி தாணு. சிறந்த பண்பான தயாரிப்பாளர் என்று இயக்குனர்கள், நடிகர்கள் பாராட்டும் ஒருவராக இருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் தாணு முன்வந்தார்.
இந்த படத்துக்காக நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு கணிசமான தொகை அட்வான்ஸ் ஆக தரப்பட்டது. ஆனால் விடுதலை விடுதலை 2 படங்களில் இயக்குனர் வெற்றிமாறன் பிஸியாக இருந்ததால் 4 ஆண்டுகளுக்கு மேல் வாடிவாசல் படம் ஷூட்டிங்கை துவங்க தாமதம் ஏற்பட்டது.
இந்த சூழலில் அவ்வப்போது 1 கோடி ரூபாய் 50 லட்சம் 25 லட்சம் ரூபாய் என, வாடிவாசல் படத்துக்கான முழு சம்பளத்தையும் தயாரிப்பாளர் தாணுவிடம் இருந்து இயக்குனர் வெற்றிமாறன் முழுமையாக வாங்கிவிட்டதாக தெரிகிறது. இப்போது வாடிவாசல் படத்தில் நடிப்பதில் சூர்யாவுக்கும், இயக்குனர் வெற்றிமாறனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் அந்த படம் டிராப் ஆகி விட்டது.
அதனால், தாணு தயாரிக்கும் அடுத்த படத்தில் சிம்பு நடிப்பதாகவும் ஏற்கனவே வாடிவாசல் படத்துக்காக வாங்கிய சம்பளத்துக்காக அந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குவதாகவும் இருந்தது. ஆனால் நடிகர் சிம்பு சம்பள விவகாரத்தில் பிரச்னை செய்ததால் அந்த படத்தை தயாரிக்க முடியாது என தயாரிப்பாளர் தாணு பின்வாங்கி விட்டார். அதே நேரத்தில் தயாரிப்பாளர் தாணுவுக்கு ஒரு படம் இயக்க வேண்டிய நிர்பந்தத்தில் வெற்றிமாறன் இருந்து வருகிறார்.
இந்த சூழலில் சிம்பு நடிப்பதாக ஒப்புக்கொண்ட படத்தை வெற்றிமாறன் இயக்கவும் ஆனால் தயாரிப்பாளர் தாணுவுக்கு பதிலாக வேறு ஒரு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த சிம்பு படத்தை முடித்து விட்டு அடுத்து வடசென்னை 2ம் பாகம் படத்தை முடித்துவிட்டு, தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்கும் ஒரு படத்தையும் இயக்கி விட்டு அதன்பிறகுதான் தயாரிப்பாளர் தாணு படத்தை இயக்கும் ஒரு முடிவில் இயக்குனர் வெற்றிமாறன் இப்போது இருக்கிறார்.
ஆனால் வாடிவாசல் படத்துக்காக 5 ஆண்டுகளுக்கு முன்பே அட்வான்ஸ், இடையிடையே தொகை என மொத்த சம்பளத்தையும் வாங்கி விட்ட இயக்குனர் வெற்றிமாறன், அடுத்து 3 படங்களை இயக்கி முடிக்கும் வரை அதாவது இன்னும் சில ஆண்டுகள் வரை தயாரிப்பாளர் தாணு காத்திருக்க வேண்டும். அதுவரை வெற்றிமாறனுக்காக தாணு காத்திருக்க சம்மதிக்க மாட்டார். அதனால் இந்த பஞ்சாயத்து விரைவில் சபைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





