தமிழ் சினிமாவில் கடந்த அரை நூற்றாண்டு கால சரித்திரத்தில் இசைஞானி இளையராஜா பெயரை உச்சரிக்காமல் யாரும் கடந்துவிட முடியாது. 1300க்கும் மேற்பட்ட படங்கள் இசையமைத்தவர். பல ஆயிரக்கணக்கான பாடல்களை தனது இசையில் உருவாக்கியவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல மொழிகளில் தன் இசை சாம்ராஜ்யத்தை கொடி கட்டி பறக்க விட்டவர்.
இந்நிலையில் கடந்த மார்ச் 8ம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் வேலியன்ட் சிம்பொனி அரங்கேற்றம் செய்து சாதனை படைத்தார். அதன்பிறகு சென்னை திரும்பிய இசைஞானி இளையராஜா, தமிழக முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், இளையராஜானின் அரை நூற்றாண்டு கால இசை பயணத்தை பாராட்டி அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இளையராஜா ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதி தனது பிறந்த நாள் என்ற நிலையில், அதற்கு முன்பாக ஜூன் 2ம் தேதியே தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அதற்கு காரணம் ஜூன் 3ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளாகும். இதை இளையராஜா பல ஆண்டுகளாக வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில் தமிழக அரசு இளையராஜாவுக்கு நடத்தும் பாராட்டு விழாவை, அவரது பிறந்த நாளான 3ம் தேதி நடத்தும் என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால் அதன்பிறகு அதற்கான ஏற்பாடுகள் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. திமுக தரப்பிலும் அதற்கான அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இளையராஜா தரப்பில் இருந்தும் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு வரவில்லை.
இப்போது ஜூன் மாதம் துவங்கிவிட்ட நிலையில் நாளை, நாளை மறுநாளோ இந்த விழா நடக்க வாய்ப்பில்லை. ஏனெனில் கட்சி நிகழ்ச்சிகள் அரசியல் கூட்டங்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிஸியாக இருக்கிறார். மதுரையில் நடந்துவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துக்கொண்டு வருகிறார்.
அதனால் இளையராஜாவுக்கு அரசு நடத்தும் பாராட்டு விழா காரணம் கூறப்படாமல் தள்ளிப் போயுள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வர் துணை முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்க வேண்டும். ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களும் பங்கேற்க உள்ளதால் இன்னும் ஓரிரு மாதங்கள் கழித்துதான் இந்த விழா நடக்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.





