நடிகர் எம்ஜிஆர் கடைபிடித்த திரைப்பட கொள்கைகள் குறித்து பெரும்பாலும் யாரும் வெளிப்படையாக பேசுவதில்லை. எப்படி அரசியலில் அவர் முக்கிய கொள்கைகளை பின்பற்றினாரோ அதே போல் அவர் நடித்த திரைப்படங்களிலும் சில முக்கிய கொள்கைகளை பின்பற்றினார். இது அறம் சார்ந்தும் தர்மம் சார்ந்தும் நேர்மை சார்ந்தும் ஒரு சிறந்த கொள்கைகளை அவரது புகழை மேலோங்க செய்தது.
குறிப்பாக, எம்ஜிஆர் தனது திரைப்படங்களில் புகை பிடிப்பது மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டார். அதுபோன்ற காட்சிகளில் கூட கோப்பையில் உள்ள மதுவை பக்கத்தில் உள்ள பூ ஜாடியில் கொட்டி விட்டு போதையில் இருப்பதை போல நடிப்பார். அதே போல் எம்ஜிஆர் உள்ள ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரும் புகை பிடிக்க அனுமதி இல்லை.
அப்படி யாரும் புகை பிடிக்கவும் மாட்டார்கள். புகை மதுப்பழக்கம் உடலுக்கு கேடு என்பதை எம்ஜிஆர் அறிவுத்தினார். அதனால் தனது ரசிகர்கள் புகை பிடிக்கவும் மது அருந்தவும் கூடாது என்ற ஒழுக்க நெறியை ரசிகர்களுக்கு கொண்டு வந்தார். அவரது தீவிர ரசிகரான நடிகர் ராமராஜன் கூட தனது படங்களில் புகை மதுபானம் அருந்தும் காட்சிகளில் நடித்தது இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
மேலும் எம்ஜிஆர் தனது படங்களில் வில்லனை அவர் பழிவாங்க வேண்டும் என்பதற்காக கொலை செய்ய மாட்டார். இறுதியில் போலீசாரிடம் மட்டுமே வில்லனை ஒப்படைப்பார். அல்லது சண்டை காட்சியில் ஏற்படும் விபத்தில் வில்லன் உயிரிழப்பது போல் தான் காட்சி இருக்கும். இதன்மூலம் எதிரியை கூட ஜெயிக்க வேண்டுமே தவிர அழிக்க கூடாது என்ற எண்ணத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தினார்.
எம்ஜிஆர் படங்களில் தாய் பாசத்துக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அன்னை சொல் தட்டாத மகனாக நடந்துக்கொள்வார். மேலும் பெண்களின் உரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட காட்சிகள் இருக்கும். மேலும் ஏழைகளின் தோழனாகவே எம்ஜிஆர் இருப்பார். ஏழைகளின் கஷ்டங்களை சொல்வார். ஏழைகளின் நண்பராகவே பல படங்களில் எம்ஜிஆரின் கேரக்டர் இருந்திருக்கிறது.
மேலும் எம்ஜிஆரின் கொள்கை பாடல்கள், தத்துவ பாடல்களில் மக்களுக்கான விழிப்புணர்வு கருத்துகள் சமுதாய சிந்தனைகள் உழைப்பின் உயர்வு அரசியல் கருத்துகளும் நிறைந்து காணப்படும். வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே என அவரது பாடல் வரிகளில் நல்ல அறிவுரைகளும் நிறைந்திருக்கும். இப்படி தன் திரைப்பட கொள்கைகளாலும் மக்களை தன்வசப்படுத்தியவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.





