கடந்த 2025ம் ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் எண்ணிக்கை 280 ஆக இருந்தாலும் இதில் சூப்பர் ஹிட் படங்கள் என்று குறிப்பிட்டால் விரல் விட்டு எண்ணும் அளவில் 10க்கும் குறைவாகவே இருந்தது. அதிலும் சில படங்கள் வணிக ரீதியான வெற்றி என்றாலும் விமர்சன ரீதியாக பலத்த தோல்வி படங்களாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதில் 2025ம் ஆண்டில் ரசிகர்கள் கொண்டாடிய வெற்றிப் படங்கள் என்றால் அது டூரிஸ்ட் ஃபேமிலி மாமன் குடும்பஸ்தன் சிறை போன்ற சில படங்கள்தான். கூலி தலைவன் தலைவி குபேரா போன்ற படங்கள் வசூலில் ஜெயித்தாலும் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்த படங்களாக இருந்ததை மறுக்க முடியாது.
இதையடுத்து 2026ம் ஆண்டில் இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. ஜனவரி பிப்ரவரி ஆகிய 2 மாதங்களில் வெளியான படங்களில் பல படங்கள் பலத்த ஏமாற்றத்தை தந்தன என்பதை மறுக்க முடியாது. இதில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் நடித்த ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாமல் ஏமாற்றி விட்டது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்பதும் கசப்பான உண்மை. இந்த படத்தை பொறுத்த வரை நடிகர் ரவிமோகன் தான் வில்லன் நடிப்பில் பெரிய அளவில் பாராட்டை பெற்றார். தொடர்ந்து அவர் பென்ஸ் படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.
கடந்த பொங்கலுக்கு பராசக்தி வா வாத்தியார் மற்றும் நடிகர் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் என 3 படங்கள் வெளியானது. இதில் டிடிடி படம்தான் பெரிய ஹிட் படமாக இருந்தது. சமீபத்தில் வெளியான தாய்கிழவி படத்துக்கும் நல்ல வரவேற்பும் ஆதரவும் ரசிகர்களிடம் கிடைத்து வருகிறது. சசிக்குமார் நடித்த மைலார்ட் படமும் நடிகைகள் இனியா ராதா நடித்த ஸ்வீட்டி நாட்டி கிரேஸி என்ற ஏ படமும் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக கவர்ந்தது.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் நடித்த வித் லவ் படம் ரூ. 25 கோடி வரை வசூலித்த வெற்றிப் படம். கடந்த பிப்ரவரி மாதத்தில் கில்லி மாப்பிள்ளை யோகிடா காதல் கதை சொல்லவா பாடும் குயிலே ரெட் லேபிள் போர்த் ப்ளோர் ஆழி ட்ரீம் கேர்ள் பூக்கி மைலாஞ்சி அறிவான் மை டியர் டாலி சிவ சம்போ என 28 நாட்களில் மொத்தம் 22 படங்கள் ரிலீஸான நிலையில் ஓரிரு படங்களை தவிர மற்ற படங்கள் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை.





