கடந்த மாதம் 5ம் தேதி வெளியான புஷ்பா 2 படம், உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, 1800 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்து சக்கைப் போடு போட்டு வருகிறது. அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா சுனில் ரமேஷ் ராவ் பகத் பாசில் நடித்த இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் இந்த படம் ரிலீஸாவதற்கு முந்தைய நாள், ஐதராபாத்தில் சந்தியா என்ற தியேட்டரில் பிரிமியர் ஷோ நடந்தது. இதில் நடிகர் அல்லு அர்ஜூனும் கலந்துக்கொண்ட நிலையில், நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் நடிகர் அல்லு அர்ஜூனை ஐதராபாத் போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
எனினும் புஷ்பா 2 வசூலில் அசகாய சாதனை புரிந்த நிலையில், அதே போல் ஷங்கர் இயக்கிய ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் படமும் பெரிய வசூல் சாதனை புரிய வேண்டும் என தெலுங்கு படவுலகினர் எதிர்பார்க்கின்றனர். அதற்காக சில வாரங்களாக பரபரப்பாக பிரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் ஷங்கருக்கும் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே இந்தியன் 2 படத்தால் ஏற்பட்ட நஷ்டம், இந்தியன் 3 படத்தை முடிக்க அவர் கேட்கும் ரூ. 80 கோடி பிரச்னையால் லைகா நிறுவனம் சினிமா பெடரேஷனில் புகார் அளித்துள்ளது. அதில் இந்தியன் 3 படத்தை முடிக்காமல், கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய அனுமதிக்க கூடாது என புகார் மனு அளித்துள்ளது.
அதனால் இந்த படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் தியேட்டர் ஒப்பந்தங்கள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் லக்கி பாஸ்கர் தெலுங்கு படத்தை தமிழ்நாடு தியேட்டர்களில் ரிலீஸ் செய்த ராக்போர்ட் முருகானந்தம் தான், கேம் சேஞ்சர் படத்தையும் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய உள்ளதாக ரூ. 25 கோடி உரிமம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் தமிழ்நாட்டில் கேம் சேஞ்சர் படம் ரிலீஸாகுமா, அல்லது லைகா புகார் காரணமாக படம் வெளியீட்டில் சிக்கல் ஏற்படுமா என்ற குழப்பம் நீடிக்கிறது. 4 நாட்களே உள்ள நிலையில் தியேட்டர்களில் இன்னும் ரிலீஸ் ஒப்பந்தம் போடவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, தெலுங்கு சினிமாவில் முக்கிய பிரமுகர். தமிழ்நாட்டில் கேம் சேஞ்சர் படம் ரிலீஸ் ஆகாவிட்டால் ஒரு தமிழ் படம் கூட தெலுங்கானா ஆந்திராவில் ரிலீஸ் ஆகாது என ஏற்கனவே எச்சரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





