நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களின் ஒருவராக இருக்கிறார். நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் வரிசையில் கமல்ஹாசனும் ஒருவராக இருக்கிறார். நாளை கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆகிறது. உலகம் முழுவதும் மொத்தம் 5 ஆயிரம் திரைகளில் இந்தியன் 2 படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 750 திரைகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
கடந்த 1996 ஆம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படம் உருவானது. லஞ்சம், ஊழல் இவற்றை மையப்படுத்தி அவற்றுக்கு எதிரானதாக எடுக்கப்பட்ட இந்த படத்தில், சேனாபதி என்ற தாத்தா கேரக்டரில் நடித்த கமலுக்கு சிறந்த நடிகர் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2ம் பாகமாக நாளை வெளிவருகிறது
இந்தியன் 2 படத்துக்கு நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சி அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாளை காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து இரவு 2 மணிக்குள் அடுத்த நான்கு காட்சிகளை முடித்துக்கொள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கு அந்த உத்தரவில் நிபந்தனையாக தமிழக அரசு கூறியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடிகராக மட்டுமின்றி மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சி தலைவராகவும் இருந்து வருகிறார். இதுவரை சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட நிலையில் ஒருமுறை கூட சட்டசபை தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் கமல் கட்சி வெற்றி பெறவில்லை. ஒரு தொகுதியில் கூட கமல் வெற்றி வாகை சூட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியை தழுவினார். அதனால் இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. ஆனால் நடிகர் கமல்ஹாசன் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாளராக இருந்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கமல்ஹாசன் திமுகவின் விசுவாசமான ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
நாளை இந்தியன் 2 படத்தைக் காண தனது அரசியல் நண்பர்கள் சிலருக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் டப்பிங் பேசும்போது இந்தியன் 2 படத்தை கமல்பார்த்திருந்தாலும் ஒரு முழுமையான திரைப்படமாக நாளை தான் அவர் படத்தை பார்க்க இருக்கிறார். நாளை நடிகர் கமலுடன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆகிய இருவரும் இந்தியன் 2 படத்தை காண இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





