தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளாக இசை சக்ரவர்த்தியாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. இசைஞானி என்று போற்றப்படும் அவர் மீது தனிப்பட்ட விமர்சனங்கள் சர்ச்சைகள் நிறைய இருந்தாலும் ஒரு இசைக் கலைஞனாக அவரை பாராட்டாத ரசிகர்கள் இருக்க முடியாது. இசையில் ஒரு ராஜாவாக 80 வயதுகளிலும் அவர் ஜொலிக்கிறார்.
இளையராஜா இசைக்காக மட்டுமே ஓடிய படங்கள் ஏராளமான இருக்கின்றன. கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் இளையராஜா இசையமைத்தால் அந்த படம் சூப்பர் ஹிட் என்பது சென்டிமென்ட் ஆக இருந்தது. அதே நேரத்தில் அது உண்மையாகவும் இருந்தது. அவரது இசையில் பல படங்கள் பெரிய வெற்றியை குவித்தது.
ஆரம்பத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பல படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா தான். ஆனால் ஒரு கட்டத்தில் மணிரத்னம் – இளையராஜா இடையே சிறிது கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இயக்குனர் கே பாலசந்தர், ஏஆர் ரகுமானை மணிரத்னத்துக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்பிறகு ரோஜா படத்தை இயக்கிய மணிரத்னம், ஏஆர் ரகுமானின் பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றன. அதன்பிறகு ரோஜா படத்தில் இருந்து கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தக்லைஃப் படம் வரை மணிரத்னம் இயக்கிய அனைத்து படங்களிலும் ஏஆர் ரகுமான்தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது வெற்றிக்கூட்டணி 35 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மம்முட்டி அரவிந்த் சாமி ஷோபனா உள்ளிட்டோர் நடித்த படம் தளபதி. இந்த படத்தில் இடம்பெற்ற சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல் இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு கிளாசிக் பாடலாக உள்ளது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இசைஞானி இளையராஜா இந்த பாடல் குறித்து கூறியிருக்கிறார்.
அதில் இளையராஜா கூறியதாவது, இந்தப் பாடலின் மெட்டை போட்டு காட்டிய போது மணிரத்னம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ராஜா நாம வேற டியூன் ட்ரை பண்ணலாமா? என்றார். ஆனால் நான் அவரிடம், மணி இந்த ட்யூனை மிஸ் பண்ணிடாதீங்க என்று ஒரே வார்த்தையில் அழுத்தமாகச் சொன்னேன். அதன் பிறகு அவரும் ஒப்புக்கொண்டார். அப்படி உருவானது தான் இந்த மாபெரும் கிளாசிக் பாடல் என்று இளையராஜா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





