தமிழ் சினிமாவில் இசையில் உச்சம் தொட்டவர் இசைஞானி இளையராஜா. கடந்த 47 ஆண்டுகளாக அவரது இசை என்பது ரசிகர்களின் வாழ்வில் ஒன்றாக கலந்திருக்கிறது. அவரது இசை எல்லா விதங்களிலும் மக்களின் மனங்களில் நிலைத்திருக்கிறது. ஒரு இசை கலைஞனாக மக்களின் மனங்களை வென்றெடுத்தவர் இளையராஜா என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால் தனி மனிதராக இளையராஜா பல விமர்சனங்ளை சந்திக்கிறார். நான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் எனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடுகிறார். சமீபத்தில் கூட ஒரு நேர்காணலில் யாரும் செய்யாத சாதனைகளை இசையில் நான்தான் செய்திருக்கிறேன். எனக்கு வராமல் வேறு யாருக்கு தலைகணமும் கர்வமும் வரும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கடந்த 1990களில் இளையராஜா போலவே இசையில் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் தேனிசை தென்றல் தேவா. வைகாசி பொறந்தாச்சு சூரியன் சேரன் பாண்டியன் அண்ணாமலை பாட்ஷா அவ்வை சண்முகி காதல் கோட்டை ஆசை என பல ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் தேனிசை தென்றல் தேவா தான்.
தேவா இசையில் உருவான பல பாடல்களை கேட்கும் ரசிகர்கள், இது இளையராஜா இசை என்று ஏமாந்து போயிருக்கிறார்கள். அந்தளவுக்கு தேவாவின் இசையும் இளையராஜா இசைக்கு சமமானதாக சிறந்த தரமான இசையை தேவா தந்தார். பல கானா பாடல்களை தேவா பாடியிருக்கிறார்.
இப்போது தேவா, தமிழ்நாட்டில் பல ஊர்களில் தனது இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அவரது இசை கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. அவரது இசை ரசிகர்களும் பெருமளவில் இந்த இசை கச்சேரிகளை காண நேரில் வருவதால், கணிசமான வருமானம் கிடைத்து வருகிறது. தேவா மட்டுமின்றி யுவன் சங்கர் ராஜா இளையராஜா விஜய் ஆண்டனி பாடகி சித்ரா பாடகர் மனோ என பலரும் இசை கச்சேரிகளை நடத்தி, கணிசமான வருமானம் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபகாலமாக தேனிசை தென்றல் தேவா இசைக் கச்சேரி நடக்கும் ஊர்களில் எல்லாம், இளையராஜா கச்சேரியும் நடப்பதாக அறிவிக்கப்படுகிறது. அதனால் தமிழ்நாடு, வெளிநாடுகளில் தேவா இசை கச்சேரிக்கு டிக்கெட் விற்கும் நேரங்களில் எல்லாம் இளையராஜா கச்சேரி குறித்த அறிவிப்பு வெளியாகி, இவரது இசை கச்சேரிக்கு பயங்கர பாதிப்பு ஏற்படுகிறது. இது தெரிந்து நடக்கிறதா, அல்லது யதேச்சையாக நடக்கிறதா என தெரியவில்லை என்று வலைப்பேச்சு ஜெ பிஸ்மி ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.





