தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர் சிவக்குமார். அவரது மூத்த மகன் சூர்யா. ஆரம்பத்தில் நடிக்க வந்த புதிதில் பள்ளி மாணவன் போல இருக்கிறார் என கேலி பேசப்பட்ட நடிகர் சூர்யா மௌனம் பேசியதே நந்தா படங்களில் நடித்து தன்னை சிறந்த நடிகர் என நிரூபித்து காட்டினார். காக்க காக்க படம் மூலம் ஆக்சன் ஹீரோவாகவும் மாறினார்.
தொடர்ந்து கஜினி சிங்கம் ஏழாம் அறிவு அயன் வேல் என பல வெற்றிப் படங்களை கொடுத்த சூர்யாவுக்கு கடந்த 10 ஆண்டுகளாக தோல்வி படங்களாகே இருந்து விட்டன. நேரடியாக ஓடிடியில் வெளியான ஜெய்பீம் சூரரைப் போற்று படங்களை தவிர தியேட்டர்களில் வெளியான 10 படங்களும் பலத்த தோல்வியை சந்தித்தன.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் சிங்கம் 2 படம் கடந்த 2013ம் ஆண்டில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அடுத்து சிங்கம் 3 பசங்க 2 மாசு என்கிற மாசிலாமணி 24 காப்பான் அஞ்சான் எதற்கும் துணிந்தவன் என்ஜிகே தானா சேர்ந்த கூட்டம் கங்குவா என 10 படங்களுமே தோல்வி படங்களாக அமைந்துவிட்டன. இது சூர்யாவை பலத்த ஏமாற்றத்தில் தள்ளியது.
இந்நிலையில் சூர்யா நடிப்பில் அவரது 44வது படம் ரெட்ரோ வருகிற மே 1ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யாவுடன் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 45 படமும் பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இதில் இயக்குனர் அமீர் மிக முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கட்டாகுஸ்தி பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு பிறகு மலையாள பட இயக்குனர் மற்றும் நடிகர் பசில் ஜோசப் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இந்த படத்தை நடிகர் மம்முட்டி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து நடிகர் சூர்யா, தெலுங்கு பட இயக்குனர் சந்தூ மொண்டேட்டி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இவர் தெலுங்கில் கார்த்திகேயா 2 என்ற வெற்றிப் படத்தை கடந்தாண்டில் தந்த வெற்றிப் பட இயக்குனர். இந்த படத்தை தெலுங்கு மாஸ் ஹீரோ அல்லு அர்ஜூனின் தந்தை அல்லு அரவிந்த் தயாரிக்கிறார். அவரது தயாரிப்பு நிறுவனம் கீதா ஆர்ட்ஸ்தான் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளது. தமிழில் பெரிய வெற்றி இல்லாததால் இப்போது மலையாளம், தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் நடிக்க சூர்யா அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.





