நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கின்றனர். ஆரம்பத்தில் இருவரும் நிறைய படங்களில் இணைந்து நடித்தனர். குறிப்பாக 16 வயதினிலே அபூர்வ ராகங்கள் நினைத்தாலே இனிக்கும் அலாவுதீனும் அற்புத விளக்கும் மூன்று முடிச்சு என பல படங்களில் இருவரும் இணைந்து நடித்திருக்கின்றனர்.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு ரஜினி கமல் நடித்த படங்கள் வணிகரீதியாக தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் தந்தது. ஆனால் ரஜினி கமல் சம்பளத்தை உயர்த்தி தர எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. இதனால் தனிப்பட்ட முறையில் நமது வளர்ச்சிக்கு தனித்தனியாக இனி பயணிப்போம் என இருவரும் கலந்து பேசி முடிவு செய்தனர்.
அதனால் நினைத்தாலே இனிக்கும் படத்துக்கு பிறகு கடந்த 46 ஆண்டுகளாக இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. ஆனால் நட்பில் இருவரும் நெருக்கமாக இன்று வரை இருந்து வருகின்றனர். இயக்குனர் கே பாலசந்தருக்கு பிறகு நடிகர் கமல்ஹாசனின் அன்புக்குரிய ஒருவராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் தான். சந்தோஷம் என்றாலும் துக்கம் என்றாலும் முதலில் கமல் நாடிச் செல்வது ரஜினியிடம்தான்.
இந்த சூழ்நிலையில் இப்போது நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிக்க முடிவு செய்திருக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்கப் போவது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் என்று கமல் தரப்பு உறுதியாக சொல்கிறது. ஆனால் ரஜினிக்கு இதில் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது.
இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அடுத்ததாக கமல்ஹாசன் கல்கி 2898 ஏடி 2ம் பாகத்திலும் அன்பறிவ் மாஸ்டர் இயக்கும் தனது 237வது படத்திலும் கமல்ஹாசன் நடிக்க உள்ளார். இந்த படங்களை முடித்த பிறகு ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கும் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய லேட்டஸ்ட் தகவலின்படி வருகிற 2026ம் ஆண்டில் மே மாதம் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கை துவங்க முடிவு செய்திருக்கின்றனர். தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி 2027ம் ஆண்டில் பொங்கலுக்கு அந்த படத்தை ரிலீஸ் செய்வது என்ற முடிவிலும் இருக்கின்றனர். அதனால் படத்தின் இயக்குனர் மற்றும் இதர நடிகர் நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகலாம்.





