நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் நடிகர் ஆர் சுந்தர்ராஜன் கூறியதாவது, ஒருநாள் ஓட்டல் அறையில் டிவியில் ஒளியும் ஒலியும் பார்த்துக்கொண்டு இருந்தேன். அதில் பழைய கருப்பு வெள்ளை பாடல் ஒன்றை மெய்மறந்து ரசித்துக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென எனக்குப் பின்னால் இருந்து என்னா அழகன்யா… பேரழகன் என்று வியந்து சொல்லும் குரல் கேட்டது.
திரும்பிப் பார்த்தால் இசைஞானி இளையராஜா நின்றுகொண்டு இருந்தார். பாடலை ரசித்துக்கொண்டு அவர் உள்ளே வந்ததைக்கூட நான் கவனிக்கவில்லை. அவர் அப்படிப் புகழ்ந்து சொன்னது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை தான். மதுரை வீரன் படத்தில் வந்த நாடகமெல்லாம் கண்டேன் பாடலைப் பார்த்துக்கொண்டு இருந்தபோது தான் இளையராஜா அந்த வார்த்தைகளைச் சொன்னார். ஆன்மிகச் சிந்தனையும் ஞானமும் கொண்ட இளையராஜாவே எம்ஜிஆரின் அழகைப் பார்த்து அப்படி பிரமித்து பாராட்டியது எனக்கு வியப்பாக இருந்தது என்று ஆர் சுந்தர்ராஜன் கூறியிருக்கிறார்.





