நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் ஜனநாயகன். இந்த படத்தை பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. சதுரங்க வேட்டை நேர்கொண்ட பார்வை தீரன் அதிகாரம் 1 வலிமை துணிவு ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய எச் வினோத் டைரக்ட் செய்திருக்கிறார். படத்துக்கு அனிருத் இசைமைக்க உள்ளார்.
வழக்கமாக விஜய் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருக்கும். இது விஜய் நடிக்கும் கடைசி படம். பூஜா ஹெக்டே பிரியாமணி மமிதா பைஜூ பிரகாஷ் ராஜ் பாபி தியோல் நரேன் கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் ஜனநாயகன் படம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருக்கிறார். வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகை நேரத்தில் ஜனநாயகன் படம் திரைக்கு வர உள்ளது. அதே பண்டிகை நாட்களில் சூர்யா நடித்த கருப்பு, சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் ரிலீஸாக உள்ளது.
ஏற்கனவே திமுக குறித்து நடிகர் விஜய் தொடர்ந்து கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். மதுரையில் நடந்த தவெக அரசியல் மாநில மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலினை அங்கிள் அங்கிள் என விஜய் பேசியது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. அதனால் ஜனநாயகன் படம் ரிலீஸின் போது சிக்கல் ஏற்படும். ரெட் ஜெயின்ட் மூவீஸ் தரும் அழுத்தம் காரணமாக போதிய தியேட்டர்கள் ஒதுக்கப்படுமா, படம் ஓட திமுகவினர் விடுவார்களா என்பதே பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இந்நிலையில் மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி வீடியோ ஒன்றில் ஜனநாயகன் படம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஜெ பிஸ்மி கூறியதாவது, ஜனநாயகன் படத்தை இன்னும் எந்த சாட்டிலைட் டிவி சேனலும் வாங்கவில்லை. வழக்கமாக சன் டிவி அல்லது விஜய் டிவிதான் விஜய் படங்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கும்.
ஆனால் இப்போதைய அரசியல் சூழல் காரணமாக, ஜனநாயகன் படத்தை வாங்க சன் டிவி நிறுவனம் முன்வரவில்லை. ஆனால் விஜய் டிவியும் அதற்கான ஆர்வம் காட்டாமல் இருப்பது ஆச்சரியம் தருகிறது. சாட்டிலைட் டிவி சேனல்கள் தரப்பில், ஜனநாயகன் படத்துக்கு என்ன விலை என்று கேட்காமல் கூட இருப்பது பெரிய அதிர்ச்சியாக உள்ளது, என்று ஜெ பிஸ்மி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.





