நடிகர் விக்ரமிற்கு சமீபகாலமாக நடித்து வந்த திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியையே கொடுத்தன. சாமி ஸ்கொயர், ஸ்கெட்ச், இருமுகன், பத்து எண்றதுக்குள்ள உள்பட எந்த திரைப்படங்களும் அவருக்கு சரியாக ஓடவில்லை. அவர் பெரிதும் எதிர்பார்த்து இருந்த, கோப்ரா திரைப்படமும் படுதோல்வியை சந்தித்தது. இது திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்ததால் பலரும் மிகவும் எதிர்பார்த்திருந்தனர்.
அஜய் ஞானமுத்து ஏற்கனவே டிமாண்டி காலனி படத்தை எடுத்தவர். ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இப்படியான சூழலில் விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் விக்ரமின் நடிப்பு பாராட்டப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க விக்ரம் – கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.
பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி இந்த திரைப்படத்தை எடுத்து முடித்தார் கௌதம் மேனன். இதில் விக்ரமுடன் சிம்ரன், ராதிகா, திவ்யதர்ஷினி, விநாயகம் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். இந்த படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் கௌதம் மேனன் ஈடுபட்டு வந்தார். கடைசியாக நவம்பர் மாதம் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இறுதி நேரத்தில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர் பட்டதால் அதன் ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. கௌதம் என்னும் துருவ நட்சத்திரம் வெளியிடுவதற்கான வேலையில் இருந்து பின் வாங்கினார். விக்ரமும் இந்த படத்தை வெளியிடுவதற்கான எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே அவர் அடுத்ததாக, பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படத்தையே நம்பி இருக்கிறார்.
இதில் பார்வதி மேனன், பசுபதி, மாளவிகா, மோகனன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு, கோலார் தங்கவயல் சுரங்கம், மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதில் நீண்ட தாடி, கையில் கம்பு, வழுக்கை தலையென மிரட்டலான லுக்கில் காட்சியளித்தார் விக்ரம்.
பிரம்மாண்ட செலவில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதிலிருந்து வெளியான டீசர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதேசமயம் படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்தது. சுதந்திர காலகட்டத்தில் இருந்த ஒடுக்கு முறையை இந்த படம் பேசுவதாக கூறப்படுகிறது. தங்கலான் திரைப்படம், வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் மீதம் இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்த நிலையில் ஏப்ரல் மாதம் தங்கலான் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.





