நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். ஜெயம், தனி ஒருவன், போகன், வனமகன், பேராண்மை, சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவரது அண்ணன் மோகன் ராஜா முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். அதேபோல் இவர் அப்பா எடிட்டர் மோகனும் தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலமாக இருந்து வருகிறார்.
நடிகர் ஜெயம் ரவி தன்னுடன் கல்லூரியில் படித்த ஆர்த்தி என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து, கடந்த 2009ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண் பிள்ளைகள் இந்த தம்பதிக்கு உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து விட்டதாக கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது தமிழ் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து ஜெயம் ரவி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தனது மனைவியுடன் செய்து கொண்ட திருமணம் செல்லாது என்று அறிவிக்கவும் அந்த திருமணத்தை ரத்து செய்யுமாறும் கூறி விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். ஜெயம் ரவி தனது பிறந்த நாளில் இந்த மனுதாக்கலை செய்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் தன்னிடம் இது பற்றி எதுவுமே பேசாமல், நடிகர் ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவெடுத்து இந்த பிரிவு மற்றும் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டதாக ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி கூறியிருந்தார். ஆனால் அவருக்கு 2 முறை நோட்டீஸ் அனுப்பி விட்டுதான், கோர்ட்டில் மனுதாக்கல் செய்தேன் என்றும் ஜெயம் ரவி கூறியதும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் ஜெயம் ரவி நடித்த பிரதர் படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதற்காக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஜெயம் ரவி, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், என்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கின் லாகின் விவரங்கள் கூட என்னிடம் இல்லை. அதையும் மனைவி வீட்டார்தான் நிர்வாகித்து வந்தார்கள் என்று மறைமுகமாக தெரியப்படுத்தினார்.
மேலும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டிருந்த ஜெயம் ரவி, அதன்பின் எந்த பதிவும் போடவில்லை. தற்போது இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை அணுகி, தன்னுடைய லாகின் விவரங்களை ஜெயம் ரவி பெற்றுள்ளார். இதையடுத்து நேற்று முதல் தனது அடுத்த படமான பிரதர் படம் பற்றிய சில பதிவுகளை அப்டேட் செய்துள்ளார். இன்ஸ்டாஸ்கிராம் கூட தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல், மனைவி வீட்டார்தான் அதை நிர்வாகித்து வந்தனர் என்று ஜெயம் ரவி வருத்தப்பட்டு கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




