இயக்குநர் பாலா தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர். அவர் இதுவரை இயக்கிய படங்களில் பெரும்பாலானவை ரசிகர்களிடம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியவை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சூர்யா, விக்ரம், ஆர்யா, விஷால், அதர்வா என இந்த ஐந்து பேருக்கும் சிறந்த பெயரை பெற்றுக்கொடுத்ததும் பாலா இயக்கிய படங்கள்தான்.
பாலா முன்னணி இயக்குநராக இருந்தாலும் சமீபகாலமாக எந்த ஹிட்டும் கொடுக்கவில்லை. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை, நாச்சியார் ஆகிய படங்கள் தோல்வியையே சந்தித்தன. இந்த சூழலில் அவருக்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்தும் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி துருவ்வை வைத்து அவர் இயக்கிய வர்மா படம் கிடப்பில் போடப்பட்டதும் அவருக்கு பெரும் கரும்புள்ளியாகவே அமைந்துவிட்டது.
இப்படி தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் பிரச்னையை சந்தித்த பாலா சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை தொடங்கினார். ஆனால் இந்தப் படத்திலிருந்து சூர்யா விலகினார். அதனையடுத்து அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் உள்ளிட்டோரை வைத்து மீண்டும் வணங்கான் படத்தை தொடங்கியிருக்கிறார்.கண்டிப்பாக இந்தப் படத்தின் மூலம் அவர் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதில் ஒரு கையில் பெரியாரையு, மறுகையில் பிள்ளையாரையும் தூக்கிக்கொண்டு சேறும் சகதியுமாக நின்றிருந்தார் அருண் விஜய். இது வரவேற்பை பெற்றாலும் இந்தப் போஸ்டர் மூலம் பாலா எதை சொல்லவருகிறார் என்று ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி இதுகுறித்து பேசியிருக்கிறார்.
அவர் அளித்த பேட்டியில், “வணங்கான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது விநாயகர் பக்கத்தி பெரியாரை வைத்திருக்கிறாரே என்று எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. பாலா மிகப்பெரிய பக்திமான். கடவுள் நம்பிக்கை கொண்ட ஒருவர் அவர். அவருடைய படத்தில் பெரியாரும் பிள்ளையாரும் இருக்கும்போது பெரியாரை எப்படி சித்தரித்திருப்பார் என்று தெரியவில்லை.
வணங்கான் படத்தின் கதை ஓரளவுக்கு எனக்கு தெரியும். அந்தப் படத்தின் கதைக்கும் வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதுதான் என் கருத்து. பெரியாரும், பிள்ளையாரும் தற்போது பேசுபொருளாக இருப்பதால் இப்படி சித்தரிக்கப்பட்டிருக்கிறதோ என தோன்றுகிறது. சினிமாக்காரர்கள் எப்போது விளம்பரத்தை விரும்புவார்கள். எனவே இது விளம்பரத்துக்காக பாலா செய்த சித்து வேலையாக இருக்கலாம்””என்றார்.





