நடிகர் சூரி நடித்த மண்டாடி படம் ரூ. 100 கோடி வசூலை கடந்த நிலையில், தனது அடுத்த படத்தில் நடிக்க நடிகர் சூரி ரூ. 35 கோடி சம்பளம் கேட்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் என்னுடைய பெயர் பரோட்டா சூரி கிடையாது. அப்படி ஒரு பெயரே எனக்கு இல்லை என்று நடிகர் சூரி மதுரையில் பேசியிருப்பது இப்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, சர்வர் சுந்தரம் படத்தில் ஓட்டல் சர்வராக இருக்கும் நாகேஷ் பின்னாளில் பெரிய நடிகராக மாறிவிடுவார். நிற்பதற்கு சாப்பிடுவதற்கு கூட நேரமில்லாத அளவுக்கு படங்களில் அவ்வளவு பிஸியாக நடித்துக்கொண்டு இருப்பார்.
அந்த படத்தில் ஒரு காட்சியில் தனது வீட்டுக்கு வரும் நாகேஷ், தன்னுடைய அறையில் சுவரில் மாட்டப்பட்டிருந்த டிரஸ்சை காணவில்லை என்று பதறிப் போய்விடுவார். உடனே வேலைக்காரனை அழைத்து இங்கே மாட்டியிருந்த என்னுடைய சர்வர் டிரஸ் எங்கே? என்று கேட்பார். அதை குப்பையில் எடுத்து போட்டுவிட்டேன் என்று சொல்ல, உடனே அந்த டிரஸ்சை எடுத்துட்டு வந்து இங்கு மாட்டி வை என்று நாகேஷ் உத்தரவாக சொல்வார்.
அந்த டிரஸ் போட்டவன்தான் நான். இப்போது கோட் சூட் போட்டாலும் முதலில் அப்படி ஒரு சர்வராக வாழ்ந்தவன் என்று அந்த டிரஸ்தான் எனக்கு அடிக்கடி நினைவுபடுத்தும். அப்போதுதான் பெரிய நடிகன் என்ற கர்வம் எனக்குள் வராமல் தடுக்கும். அந்த டிரஸ் போட்டதால் தான் இன்று இந்த கோட் சூட் போட்டிருக்கிறேன் என்பதையும் எனக்கு உணர்த்தும் என்று அந்த காட்சியில் நாகேஷ் கூறியிருப்பார்.
நடிகர் சூரி போன்ற நடிகர்களை மனதில் வைத்துதான் இயக்குனர் கே பாலசந்தர் அன்றே அப்படி ஒரு காட்சியை தனது படத்தில் வைத்திருந்தார். அந்த காட்சியை நடிகர் சூரி பார்க்க வேண்டும். உண்மையில் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அந்த பரோட்டா சாப்பிடும் காமெடி காட்சியில் முதலில் நடிக்க இருந்தவர் சூரி அல்ல.
மேட்டூர் சேகர் என்ற துணை நடிகர்தான் அந்த காட்சியில் இருந்தார். அவர் சென்னையில் இருந்து பஸ் பிடித்து அந்த படப்பிடிப்பு நடந்த திண்டுக்கல் பழனிக்கு சரியான நேரத்தில் வர முடியவில்லை. அப்போது செல்போனும் கிடையாது. அந்த நேரத்தில் பரோட்டா காமெடி காட்சியில் நான் நடிக்கிறேன் என்று சூரியே கேட்டதால் தான் இயக்குனர் சுசீந்திரன் அவரை நடிக்க வைத்தார். அப்படி மேட்டூர் சேகர் என்ற துணை நடிகரின் வாய்ப்பை தட்டி பறித்துதான் அந்த காட்சியில் சூரி நடித்து புகழ் பெற்றார் என்று செய்யாறு பாலு அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





