நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. பான் இந்தியா ஸ்டார்கள் களமிறங்கியிருப்பதால் பான் இந்தியா படமாக ரிலீஸாகவிருக்கிறது. ரஜினிக்கும்,நெல்சன் திலீப்குமாருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக இது இருக்கிறது. இருவருமே இதில் வெற்றி பெற்று தங்களை மீண்டும் நிரூபிக்க காத்திருக்கிறார்கள்.
இதன் ஆடியோ வெளியீட்டு விழா 28ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் நடந்த அந்த விழாவில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த அதிக குரல்கள் கேட்டன. அதில் ஒரு குரல்தான் கலாநிதி மாறனின் குரல். 28ஆம் தேதி நடந்த ஆடியோ ரிலீஸ் விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இன்று சன் டிவியில் முழு நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது.
விழாவில் பேசிய கலாநிதி மாறன், “ ஜெயிலர் படத்தை இன்னும் பார்க்கவில்லை. பார்த்த அனைவருமே சூப்பர் என்று சொல்லிவிட்டார்கள். கதையை ரஜினிதான் முதலில் கேட்டார். பிறகு என்னிடம் சார் கவலைப்படாதீங்க நெல்சன் மீது நம்பிக்கை இருக்கிறது என்றார். இதேபோல்தான் எந்திரன் படத்துக்கும் ரஜினி சொன்னார். நெல்சன் உங்கள் ஹார் ஒர்க் க்ளிக் ஆகும். நிச்சயம் படம் மெகா ஹிட்டாகும். அனிருத் பிச்சு உதறுறாரு. நெல்சனுக்கும், அனிருத்துக்கும் செம கெமிஸ்ட்ரி இருக்கு. நெல்சனும், அனிருத்தும் சேர்ந்து ஒரு காமெடி படம் நடிக்க வேண்டும்.
என்னுடைய தாத்தா கலைஞர் கருணாநிதி ரஜினியை ரசித்தார். நான் இப்போது ரசித்துக்கொண்டிருக்கிறேன். எனது மகள் காவியாவும் ரசித்துக்கொண்டிருக்கிறார். எங்களைப் போலவே எனது பேரனும், பேத்தியும் ரசிப்பார்கள்.அதனை சூப்பர் சுப்பு பாடலில் எழுதிவிட்டார். ரஜினிக்கு ரஜினி மட்டும்தான் போட்டி.
இண்டஸ்ட்ரிக்கு வந்தவர்களும் சரி, வரவங்களும் சரி எல்லோரும் ரஜினி மாதிரி ஆகனும்னு ஆசைப்படுறாங்க. அது தப்பே இல்லை. இப்போ ரஜினிக்கு 72 வயதாகிறது. ஆனா அவர் ஹீரோவாக நடிக்க தயாரிப்பாளர்கள் க்யூவில் நிற்பதுபோல் உங்களுக்கு நிற்கட்டும்; அந்த வயதில் ரஜினிக்கு இருப்பது போல் ஸ்பீடு,ஸ்டைல் எல்லாம் உங்களுக்கும் இருக்கட்டும். அப்போது சொல்லுங்கள் ரஜினி சார் இடத்துக்கு வந்துவிட்டேன் என்று.அதுவரைக்கும் இந்திய திரையுலகின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான்” என்றார்.





