தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களில் கல்லா கட்டும் இயக்குனராக வலம் வருபவர் அட்லி. ராஜா ராணி திரைப்படத்தில் தொடங்கிய அவரது பயணம், இன்று புகழின் உச்சிக்கு சென்றிருக்கிறது. விஜயுடன் அவர் அடுத்தடுத்து இயக்கிய மூன்று திரைப்படங்களும் வெற்றியை இதற்கு முக்கிய காரணம்.
தெறி, மெர்சல், பிகில் என மூன்று திரைப்படங்களையும் வசூல் ரீதியாக சாதனை படைக்க வைத்தார் அட்லி. அந்தக் கதையில் ஆயிரம் கோளாறு உண்டு என பலர் கூறினாலும், அது படத்திற்கான வசூலை பாதிக்கவில்லை. இதன் காரணமாகவே அட்லியை பல தயாரிப்பாளர்களும் நாடுகின்றனர். ஆனால் அட்லி தமிழ் சினிமாவை தள்ளிவிட்டு இந்தி சினிமாவுக்குள் நுழைந்தார்.
இதில் எடுத்த எடுப்பிலேயே ஷாருக்கானுடன் கைகோர்த்தார் அட்லி. ஜவான் என்னும் பெயரில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. அது மட்டுமல்ல இந்த திரைப்படத்தின் மூலம் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் பாலிவுட்டில் அறிமுகமானவர்கள். அதிலும் நயன்தாராவுக்கு கதாநாயகி அந்தஸ்தை கொடுத்திருந்தார் அட்லி.
ஆனால் படத்தில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும், சில காட்சிகளில் தீபிகா படுகோன் வந்தாலும் அவர்தான் படத்தை தூக்கி செல்கிறார் என்றும் பலர் பேசினர். இதேபோல், தமிழ்நாட்டிலும் ஜவான் திரைப்படம் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. எடுத்த காட்சிகளையே பலமுறை வைத்திருந்தால் எப்படி தான் பார்ப்பது என்று அலட்டிக்கொண்டனர் ரசிகர்கள்.
இருப்பினும் ஹிந்தி சினிமாவில் இந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. இதனால் இந்தி திரை உலகமே திரும்பிப் பார்க்கும் இயக்குனர்களில் ஒருவரானார் அட்லி. தனது அடுத்த திரைப்படத்திற்காக அவர் அல்லு அர்ஜுனிடம் கதை கூறியிருந்தார். புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளை முடித்துவிட்டு இந்த படம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் ஏனோ, அந்த ப்ராஜெக்ட் தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த சமயத்தில்தான் அவர் சல்மான் கானிடம் கதை கூறி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு முக்கிய கதாபாத்திரம் என்று கூறப்பட்டது. இப்படி இரண்டு நட்சத்திரங்களும் ஒருசேர படத்தில் நடிப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் கால் சீட் பிரச்சினை காரணமாக தற்போது ரஜினிகாந்த் அதில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கமல்ஹாசனிடம் அந்த கேரக்டர் குறித்த தகவலை அட்லி கூறி இருப்பதாகவும், இதற்கு உலக நாயகனும் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மட்டும் உண்மையாக இருந்தால் திரையரங்குகள் தெறிக்குமே என்று ரசிகர்கள் உற்சாக குரலுடன் கூறி வருகின்றனர்.





