லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படத்தின் வெற்றி, கமல்ஹாசனை உற்சாகப்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தனது ராஜ் கமல் ஃபிலிம்ஸ் சார்பில், படத்தை தயாரிப்பதில் பிஸியாகி இருக்கிறார் உலகநாயகன். சிவகார்த்திகேயன் – ராஜ்குமார் பெரியசாமி உடனான திரைப்படத்தையும், சிம்பு தேசிங்கு பெரியசாமி இணையும் படத்தையும் கமல்ஹாசனே தயாரிக்கிறார்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை எடுத்துள்ள நெல்சன், அடுத்ததாக தனுஷுடன் பணியாற்ற போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தையும் கமல்ஹாசனே தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல், நடிப்பதிலும் தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் ஆழ்வார்பேட்டை ஆண்டவர்.
சதுரங்க வேட்டை புகழ் ஹெச் வினோத்துடன் ஒரு அரசியல் படம் மற்றும் மணிரத்னம் உடனான திரைப்படம் என இரண்டு படங்களில் அவர் கமிட் ஆகியுள்ளார். இதில் மணிரத்னமுடன் இணையும் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும், கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதுபோக, பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே நடிக்கும் கல்கி 2898 AD படத்தில் வில்லனாகவும் உலகநாயகன் நடிக்கிறார்.

இப்படி காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் கமல்ஹாசன், தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். கமல்ஹாசன் சங்கர் கூட்டணியில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. லஞ்சத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் முதியவர் கதாபாத்திரத்தில், கமல்ஹாசனை நடிக்க வைத்த இயக்குனர் சங்கர், கத்தி போன்ற கூர்மையான வசனங்கள் மூலம் பலரையும் கவனிக்க வைத்தார்.
லஞ்சம் வாங்கிய தனது மகனை, இந்தியன் தாத்தா கொலை செய்யும் கிளைமாக்ஸ் காட்சி, ரசிகர்கள் மனதை உலுக்கியது. கமல்ஹாசனின் முக்கிய திரைப்படங்களின் ஒன்றான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி எடுக்கப்பட்டு வரும் இந்தியன் 2 படம், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், டிஜிட்டல் உரிமை மட்டும் 200 கோடி ரூபாய்க்கு விற்பனையாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் முக்கிய ஓடிடி நிறுவனம் ஒன்று, மிகப்பெரிய தொகைக்கு இந்தியன் 2-ஐ வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் உற்சாகம் அடைந்துள்ள படக்குழு, இந்தியன் 2-ஐ ரிலீஸ் செய்வதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகிறது.





