தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனாக இருப்பவர் கவின். சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த அவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேமஸ் ஆனார். இதன் மூலம் வெள்ளி திரையில் அறிமுகமாகும் வாய்ப்பு கவினுக்கு கிடைத்தது. இதில் அவருக்கு முதல் திரைப்படமாக அமைந்தது லிப்ட். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது.
இருப்பினும் கவினுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது டாடா திரைப்படம் தான். லிப்ட் திரைப்படத்தை தொடர்ந்து அதில் இவர் நடித்திருந்தார். தந்தை மகனுக்கும் இடையேயான பாச உணர்வு, பிரிந்து போன காதலிக்கும் காதலனுக்கும் இடையேயான உறவு என அத்தனை விஷயத்தையும் இயக்குனர் கணேஷ் கே பாபு கச்சிதமாக காட்டியிருந்தார்.
படத்தில் கவின் நடிப்பும் மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்றது. இதன் பிறகு அவர் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம், மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் 2கே கிட்ஸ்களுக்கு அந்த திரைப்படம் பிடித்துப் போனதால், வசூல் ரீதியாக லாபத்தையே கொடுத்தது என்று கூறலாம்.
இதன் பிறகு கவினுக்கு வெளியான பிளடி பெக்கர் மற்றும் கிஸ் ஆகிய இரண்டு திரைப்படங்களும் பெரிய அளவு வரவேற்பைப் பெறவில்லை. கலவையான விமர்சனத்தை பெற்ற இந்த இரண்டு திரைப்படங்களும், வசூலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் அடுத்து வெற்றி திரைப்படம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் நடிகர் கவின்.
இப்படியான சூழலில்தான் அவர் தற்போது மாஸ்க் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வெற்றி மாறனிடம் உதவியாளராக இருந்த விகர்ணன் அசோக் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். தயாரிப்பாளர்களில் ஒருவராக வெற்றிமாறனும் இருந்தார்.
பேட் கேர்ள் திரைப்படத்தை தயாரித்திருந்த போதே, இதுதான் தனது கடைசி திரைப்படம் என்று கூறி இருந்தார் வெற்றிமாறன். சொன்னபடியே தற்போது மாஸ்க் திரைப்படத்திலிருந்து விலகி இருப்பது அதன் போஸ்டரில் உறுதியாகி உள்ளது. அதில் வாத்தியாராக வெற்றிமாறன் என்று மட்டும் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது கிராஸ் ரூட் நிறுவனம் இந்த முறை போஸ்டரில் இல்லை. இதனிடையே மாஸ்க் திரைப்படம் அடுத்த மாதம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





