நடிகர் அஜீத்குமார் 2 நாட்களுக்கு முன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆனார். முதலில் இது வழக்கமாக செய்யப்படும் சாதாரண மருத்துவ பரிசோதனை, மாஸ்டர் செக்கப் என்றுதான் கூறப்பட்டது. பிறகு அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தகவல் பரவியது.
இதையடுத்து நடிகர் அஜீத்குமாருக்கு, இருதயம் சார்ந்த ஏதோ தொந்தரவு இருப்பதால், அதற்காக தான் அவர் அட்மிட் ஆகியுள்ளார். இருதயம் சார்ந்த அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளையும் செய்யுமாறு அஜீத்குமாரே, டாக்டர்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் தகவல் பரவியது.
இதற்கிடையே நேற்று திடீரென அதிர்ச்சிக்கரமான ஒரு தகவல் வைரலானது. அதாவது அஜீத்குமாருக்கு மூளையில் கட்டி எனவும், அந்த கட்டியை அகற்ற மதுரையில் இருந்து சிறப்பு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டதாகவும், 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் பரவியதால், அஜீத் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால் உண்மையில் அவருக்கு அப்படி எந்த அறுவை சிகிச்சையும் நடக்கவில்லை. மூளையில் இருந்து காதுக்கு செல்லும் ஒரு நரம்பில் சிறுவீக்கமும், சிறுகட்டியும் இருந்ததாகவும், அது எப்போது வேண்டுமானாலும் அகற்றிக் கொள்ளலாம் என டாக்டர்கள் கூறியதாகவும், இல்லை, இப்போதே அதை அகற்றி விடுங்கள் என அஜீத்குமாரே கூறியதாகவும், 30 நிமிடங்கள் அறுவை சிகிச்சை மூலம் அந்த நரம்பு வீக்கம் சரிசெய்யப்பட்டு, சிறு கட்டியும் அகற்றப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் நடிகர் அஜீத்குமார் இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில்தான் இருப்பார் என்றும், அதற்கு பிறகே அவர் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்றும் தெரிய வந்துள்ளது. அவரது ஷாலினி, அஜீத்குமாருடன் இருந்து கவனித்துக்கொள்கிறார். மிக நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே அஜீத்குமாரை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், நடிகர் விஜய் சென்னையில் இருப்பதால், மருத்துவமனையில் இருக்கும் அஜீத்குமாரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரிக்க உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அஜீத்குமார் அப்பா மறைந்த போதும் நேரில் சென்று ஆறுதல் சொன்னவர் விஜய்தான். இப்போது அஜீத்குமார் உடல் நலனிலும் விஜய் அக்கறை கொண்டு நேரில் சென்று விசாரித்தால், அஜீத் ரசிகர்கள் மொத்தமாக விஜய்க்கு வருகிற சட்டசபை தேர்தலில் ஆதரவளிக்க வாய்ப்புள்ளது. அஜீத்குமார் கூட இதற்கு மறைமுகமாக தன் ரசிகர்களுக்கு பச்சைக்கொடி காட்டலாம் என்றும் தகவல் பரவுகிறது.





