நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இதுவரை திரைக்கு வரவில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலில் இந்த படத்தை சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் லீக் செய்து விட்டனர். மேலும் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் இந்த படத்தை உள்ளூர் லோக்கல் டிவி சேனலில் ஒளிபரப்பும் செய்துவிட்டனர்.
இதுதொடர்பாக கருமத்தம்பட்டி லோக்கல் டிவி சேனல் உரிமையாளர் பழனிசாமி என்பவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். மேலும் மலேசியா போன்ற சில நாடுகளில் டிவிடி கேசட்டுகளாக ஜனநாயகன் படம் விற்பனை செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சூழலில் ஜனநாயகன் படம் வருகிற 24ம் தேதி அதாவது தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு மறுநாள் அல்லது 30ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் என்ற ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இந்த தேதிகளில் படம் ரிலீஸ ஆகுமா என்பதே இப்போது வரை சந்தேகமாக இருந்து வருகிறது.
ஏனெனில் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி இந்த படத்தை மும்பையில் சென்சார் குழுவினர் பார்த்து விட்டனர். ஆனால் இதுவரை சென்சார் போர்டு சான்றிதழ் தரவில்லை. தேர்தல் முடிவுக்கு பிறகு அதாவது மே 4ம் தேதிக்கு பிறகு படத்தை ரிலீஸ் செய்து விடுகிறோம் என்று ஒப்புதல் அளித்தும் சென்சார் தரப்பில் சான்றிதழ் தரப்படவில்லை.
இப்போது இணையத்தில் முழு படமும் லீக் ஆன நிலையில் விரைவில் படத்தை வெளியீடு செய்ய ஏதுவாக சென்சார் சான்றிதழ் வழங்குமாறு கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்சார் போர்டுக்கு இ மெயில் அனுப்பியும் இதுவரை எந்த பதிலும் அவர்கள் தரப்பில் இல்லை.
கேபிள் டிவியில் ஒளிபரப்பான ஒரு படத்துக்கு இணையத்தில் லீக் ஆகி உலகமே பார்த்துவிட்டு ஒரு படத்துக்கு இன்னும் சென்சார் சான்றிதழ் தராமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவது தளபதி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் படத்துக்கு சென்சார் போர்டு இப்படி முட்டுக்கட்டையாக இருப்பது எந்த ஹீரோவுக்கும் இதுவரை நடக்காத ஒன்றாக இருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.





