சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி லெஜண்ட் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். மிகப்பெரிய தொழிலதிபராக இந்தியா முழுவதும் கவனம் பெற்ற அவர் ஆரம்பத்தில் தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் மட்டுமே நடித்தார். பொங்கல் தீபாவளி பண்டிகை காலங்களில் அவரது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் அவரே நடனமாடி அசத்தினார்.
அதன்பிறகு இப்போது அவரது நடிப்பில் 2வது படமாக லீடர் படம் வருகிற ஏப்ரல் 3ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை அவரே தயாரித்து ஹீரோவாக நடித்திருக்கிறார். கொடி கருடன் போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இந்த படத்தை டைரக்ட் செய்திருக்கிறார்.
இந்நிலையில் லீடர் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் லெஜண்ட் சரவணன் பேசியதாவது, லீடர் படத்தை சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் தனுஷ் ஆகியோர் பார்த்தனர். படத்தை பார்த்துவிட்டு இந்த படம் பிரமாண்டமாக இருக்குது, பிரமாதமாக இருக்குது என்று பாராட்டியிருக்கின்றனர்.
எனக்கும் இந்த படக்குழுவுக்கும் லீடர் படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. இந்த படம் ஒரு ஜெயிலர் அளவுக்கோ ஒரு விக்ரம் அளவுக்கோ ஒரு லியோ அளவுக்கோ என்கிற அளவுக்கு ஒரு பெரிய வெற்றிப் படமாக அமையும். அதற்கான தகுதி அத்தனையும் இந்த படத்தில் இருக்கிறது. அது இந்த படத்தை பார்க்கும் போது உங்களுக்கு கண்டிப்பாக அது புரியும்.
வருகிற ஏப்ரல் 3ம் தேதி குட் பிரைடே அன்னிக்கு அரசு விடுமுறை தினத்தில் லீடர் படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. எல்லோரும் குடும்பத்துடன் வந்து படத்தை பாருங்கள். இந்த படம் 100 சதவீதம் உங்களுக்கு திருப்தியை கொடுக்கும் என்று அந்த விழாவில் நடிகர் லெஜண்ட் சரவணன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் இயக்குனர் துரை செந்தில்குமார். மேலும் தனுஷ் நடித்த கொடி படத்தை இயக்கியவரும் அவர்தான். அதனால் இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ் இருவரும் பார்த்து விட்டு மனதார பாராட்டியுள்ளனர். மேலும் லெஜண்ட் சரவணன் நடிக்கும் 3வது படத்தையும் டைரக்ட் செய்யப் போவது துரை செந்தில்குமார் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.





