சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ படம் வெளியானது. இந்த படத்தில், நடிகை திரிஷா நடித்திருந்தார். இதில் சில காட்சிகளில் நடிகர் மன்சூர் அலிகானும் நடித்திருந்தார். ஆனால், திரிஷா மன்சூர் அலிகான் நடிப்பது போன்ற காட்சிகள் லியோவில் கதைப்படி இல்லை. அதுவும் மன்சூர் அலிகான் சில காட்சிகளில் மட்டுமே வருவார்.
இந்நிலையில், நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் திரிஷா கூட நடிப்பதால், பெட்ரூம் சீன் இருக்கும் என நினைத்தேன். திரிஷாவை கண்ணுல கூட காட்டலை என்று ஒரு வித ஆதங்கத்துடன் மன்சூர் அலிகான் அந்த வீடியோவில் பேசி இருந்தார்.
இந்த வீடியோ குறித்து திரிஷா, கண்டனம் தெரிவித்து ஒரு கோபமான பதிவை தந்திருந்தார். அதில் இதுபோன்ற அருவறுக்கத்தக்க பேச்சை இப்போதுதான் கேட்கிறேன். இதுபோன்ற மோசமான மனிதர்களுடன் நான் நடித்ததில்லை. அவர் மனிதகுலத்துக்கே ஒரு அவமானம் என்று கூறி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட பதிவில், இந்த வீடியோவை பார்க்கும்போது கோபமாக, ஆத்திரமாக வருகிறது. மன்சூர் அலிகான் பேசியது மிகவும் கண்டனத்திற்குரியது. நம்முடன் நடிக்கும் சக மனிதர்களை, சக கலைஞர்களை மதிக்கவேண்டும். இப்படி தரக்குறைவாக பேசுவது சரியல்ல, என்று அவரது பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த விவகாரம் இப்போது சமூகவலைதளங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதுகுறித்து மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார். அதில், அய்யா பெரியோர்களே, திரிஷாவை நான் தப்பாக பேசியதாக வந்த வீடியோக்களை என் பெண்கள் மூலமாக தெரிந்துக்கொண்டேன். அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகப் போகுது, வர்ற தேர்தலில் போட்டியிட போறேன்னு எவனோ நல்லா கொம்பு சீவி விட்டுருக்காங்க.
உண்மையில் அந்த பொண்ணை பத்தி உயர்வாக தான் சொன்னேன். பழைய படங்கள் மாதிரி, இப்ப கதாநாயகிகள் கூட நடிக்கிற வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கறது இல்லைன்னு காமெடியாதான் சொன்னேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுக்கறவன். இதுவரை 360 படங்களில் நடிச்சிருக்கேன். சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் எங்கிட்ட வேகாது. திரிஷா கிட்ட வீடியோ தப்பா கட் பண்ணி காமிச்சு, என்மேல கோபப்பட வெச்சிருக்காங்கன்னு தெரியுது. போய் பொழப்ப பாருங்கப்பா, நன்றி என விளக்கம் தந்து வீடியோ பதிவிட்டுள்ளார்.





