கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் என்பதைப் போல கல்லை கூட நடிக்க வைக்கும் ஆற்றல் மிக்கவர் இயக்குனர் பாரதிராஜா என்று ஒரு பழமொழி சினிமா துறையில் சொல்லப்படுவதுண்டு. அது மிகையல்ல. ஏனென்றால் குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என்பதைப் போல பாரதிராஜாவின் இயக்கத்தில் ஒரு நடிகர் ஒரு நடிகை நடித்தால் நிச்சயமாக அவர்கள் புடம் போட்ட தங்கமாக ஜொலிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அப்படித்தான் அவரது இயக்கத்தில் நடித்த புதுமுக நடிகர்கள் நடிகைகள் பலரும் பின்னாளில் பெரிய நட்சத்திர நடிகர்களாக நடிகைகளாக தமிழ் சினிமாவில் ஜொலித்தார்கள். அவரிடம் உதவி இயக்குனராக தொழில் கற்ற கே பாக்யராஜ் பின்னாளில் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராகவும் இந்திய அளவில் சிறந்த திரைக்கதை ஆசிரியராகவும் புகழ்பெற்றார்.
அதேபோல் நடிகைகள் ராதா ரேவதி ராதிகா சுகன்யா விஜயசாந்தி பிரியாமணி உள்ளிட்டோரை திரையில் அறிமுகம் செய்தது இயக்குனர் பாரதிராஜா தான். அதேபோல் நடிகர் நெப்போலியன் பாண்டியன் கே பாக்யராஜ் கவுண்டமணி சுதாகர் போன்ற பல நடிகர்களை பாரதிராஜா தனது படங்களில் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் இதில் ஒரு சிலர் பிரகாசித்த நிலையில் ஒரு சிலர் அடுத்தடுத்த சில படங்களிலேயே காணாமல் போய்விட்டனர்.
இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசும் போது கூறியதாவது, பிறவி கலைஞர்கள் என்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. யாரும் பிறக்கும் போதே நடிகனாக இருப்பதில்லை. அவர்களின் உடல் வளர்ச்சி அறிவு வளர்ச்சி முக்கியம்.
இதைத்தொடர்ந்து சிந்தனை வளர்ச்சி அவர்களுக்குள் வளர்கிறது. அவர்களுக்குள் ஒரு கற்பனை உலகம் சிருஷ்டிக்கப்படுகிறது. அதில் சஞ்சரிப்பவர்கள் தாங்கள் விரும்பும் துறையில் மணக்கிறார்கள். அப்படி மணப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.
நான் அறிமுகம் செய்தவர்களில் பெரும் பகுதியினர் சினிமா அறிவு இல்லாதவர்களாக தான் இருந்தார்கள். ஆனால் எனது அறிமுகத்துக்கு பிறகு உழைத்தவர்கள் நின்று நிலைத்தார்கள். ஆனால் மற்றவர்கள் தோல்வியை தாங்களே தழுவிக் கொண்டிருக்கிறார்கள் என்று இயக்குனர் பாரதிராஜா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





