இந்த ஆண்டு வெளியாகும் திரைப்படங்களில், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் லியோ. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் இரண்டாவது முறையாக இணைய, இதன் சூட்டிங் பணிகளும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான், திரிஷா, பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டின் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். லியோ படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, ஆந்திர மாநிலம் தலக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
சமீபத்தில் பேட்ச் ஒர்க் பணிகளுக்காக லோகேஷ் கனகராஜ் படக்குழு காஷ்மீர் சென்றது. அக்டோபர் 19ஆம் தேதி படம் வெளியாவதால், அதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை தயாரித்து உள்ள லலித் குமார், விஜய் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவ்வப்போது அப்டேட்களை வெளியிட்டு வருகிறார்.

ஏற்கனவே விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, நா ரெடி தான் பாடல் வெளியானது. அனிருத் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல், பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து, சஞ்சய் தத் பிறந்த நாளை முன்னிட்டு அவர் தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதில் ஆண்டனி தாஸ் என்னும் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று நடிகர் அர்ஜுன் பிறந்த நாள் கொண்டாடுவதை முன்னிட்டு, அடுத்த அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை அப்டேட்டுகள் வெளியானாலும் ரசிகர்களிடம் ஒரே கேள்வி லியோ திரைப்படம், லோகேஷ் கனகராஜின் எல்சியு வில் வருமா இல்லையா என்பது மட்டும்தான். இப்படி இருக்க, சமீபத்தில் தனியார் யு டியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள மன்சூர் அலிகான், லியோ படத்திலிருந்து ஒரு சீனை கூறியிருக்கிறார். அவர் பேசியதாவது,
ஒரு நாள் செய்தித்தாளில், இயக்குனர் அனுராக் காஷ்யப் லோகேஷ் கனகராஜின் எல்சியூ இணைய விருப்பம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மறுநாள் பார்த்தால் லோகேஷ் கனகராஜ் அருகில், அனுராக் அமர்ந்திருக்கிறார். அவர் வந்தார், நடித்தார், துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டார் என்று கூறிய மன்சூர் அலிகான், இதற்கு மேல் லியோவை பற்றி எதுவும் கூற முடியாது என்று தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





