இந்திய கிரிக்கெட் அணியில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் மகேந்திர சிங் தோனி. 2011ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை உச்சி முகர்ந்த கேப்டன் தோனிக்கு, இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்க, இளைஞர்கள் செல்லமாய் தல என்று அழைக்கின்றனர். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தோனியை, கொண்டாடாத ரசிகர்களே இருக்க முடியாது.

தனது திறமையின் மூலம் கிரிக்கெட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தோனி, தற்போது சினிமா துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பதாலோ, என்னவோ முதல் முதலாக தமிழ் திரைப்பட உலகை அவர் தேர்ந்தெடுத்து இருக்கிறார். மகேந்திர சிங் தோனியும், அவரது மனைவி சாக்சி தோனியும் இணைந்து தோனி என்டர்டெயின்மென்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், லெட்ஸ் கெட் மேரிட் என்னும் படத்தை அவர்கள் தயாரித்துள்ளனர். எல் ஜி எம் என்று அழைக்கப்படும் இந்த திரைப்படத்தில், ஹரிஷ் கல்யாண், லவ் டுடே இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழில் விட்னஸ் திரைப்படம் மூலம் பலராலும் பாராட்டைப் பெற்ற ரமேஷ் தமிழ்மணி,இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

முழுக்க முழுக்க காதலை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. சென்னையில் நடைபெற்ற லெட்ஸ் கெட் மேரிட் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் தனது மனைவி சாக்சியுடன் மகேந்திர சிங் தோனி கலந்து கொண்டார்.
படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இளம் காதல் ஜோடிகளுக்கு இடையே இருக்கும் பிரச்சனையை, வித்தியாசமான முறையில் காட்சிப்படுத்தப் பட்டிருப்பதாகவும், மாமியார் மருமகளுக்கு இடையேயான உறவை எடுத்துக் கூறும் வகையில் ட்ரெய்லரில் வரும் காட்சிகள் காண்பிப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
திருமணத்திற்கு முன்பு ஹரிஷ் கல்யாண் குடும்பமும், இவானா குடும்பமும் டூர் செல்வது போன்றும், அங்கு மாமியார் நதியாவும் மருமகள் இவானாவும் நடு காட்டில் மாட்டிக் கொள்வது போன்ற காட்சிகளும் ட்ரெய்லரில் இடம்பெற்று கலகலப் பூட்டின. இந்த நிலையில் எல்ஜிஎம் திரைப்படத்தின் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள ரசிகர்கள், வெள்ளித்திரையில் தோனியை காண தயாராகி வருகின்றனர். படம் வரும் 28ஆம் தேதி திரையரங்கில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.





