வருகிற 2026 சட்டசபை தேர்தல் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையில்தான் போட்டியே என்று டிவிகே கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அவர் பேசும் மேடைகளில் எல்லாம் ஆவேசமாக பேசி வருகிறார். ஆளுங்கட்சியான திமுகவை தொடர்ந்து மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அரசியல் எதிரி திமுக என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தவெக கட்சியில் முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தார். இவர் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக 50 ஆண்டுகளாக இருந்தவர். எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சி காலங்களில் அமைச்சராகவும் பணி செய்தவர். அரசியல் அனுபவம் மிகுந்தவர். ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியில் 9 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர்.
செங்கோட்டையனை வரவேற்று ஏற்றுக்கொண்ட நடிகர் விஜய் அவருக்கு கட்சியின் தலைமை நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு கரூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தின் அமைப்பு செயலாளராகவும் நியமனம் செய்துள்ளார்.
இந்நிலையில் தமிழக அரசியல் களத்தில் நட்சத்திர பேச்சாளராக பெயர் பெற்ற நாஞ்சில் சம்பத் தவெக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். சென்னையில் உள்ள நடிகர் விஜயை நேரில் சந்தித்த நாஞ்சில் சம்பத் அக்கட்சியில் சேர்ந்துள்ளார். அவரிடம் பேசிய நடிகர் விஜய், நான் உங்கள் ரசிகன். நீங்கள் மேடைகளில் பேசுவதை மிகவும் ரசிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
மேலும் இனி தவெக நடத்தும் அனைத்து கூட்டங்களிலும் தமிழகம் முழுவதும் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று பேசலாம் என்றும் நாஞ்சில் சம்பத்துக்கு விஜய் அனுமதி அளித்திருக்கிறார். கட்சியில் சேர்ந்த சில நிமிடங்களிலேயே இப்படி ஒரு அனுமதியை விஜய் அளித்ததால் நாஞ்சில் சம்பத் புளகாங்கிதம் அடைந்துள்ளார். அதனால் இனி தவெக மேடைகளில் நாஞ்சில் சம்பத்தின் அனல் பறக்கும் பேச்சை ரசிக்கலாம்.
ஆரம்பத்தில் மதிமுக கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தவர் நாஞ்சில் சம்பத். பிறகு அன்றைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு இன்னோவா கார் பரிசளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் திமுக ஆதரவாளராக இருந்தார். ஆனால் 6 ஆண்டுகளாக எந்த கட்சியிலும் தன்னை இணைத்துக் கொள்ளாத நிலையில் இன்று விஜய் முன்னிலையில் தவெக கட்சியில் இணைந்துள்ளார்.





