சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகிய ஜெயிலர் திரைப்படமானது முதல் வாரத்திலேயே ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்புக்கு மத்தியில் 375 கோடியே 40 லட்சம் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அண்ணாத்த படம் அடைந்த தோல்விக்கு பிறகு ரஜினி பெரிய கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினி மீண்டும் “பாக்ஸ் ஆபிஸ் கிங்” என்பதை நிரூபித்துள்ளார்.

தற்போது ஜெயிலர் திரைப்படமானது ஒரு வாரத்தை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த திரைப்படத்தின் வெற்றி விழாவானது இன்று நடைபெற்றது. இந்த வெற்றி விழா கொண்டாட்டத்தில் திரைப்படக்குழுவினர் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தனர். ரஜினி மட்டும் இமயமலை சென்றுள்ளதால் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அவரை தவிர்த்து மற்ற பெரும்பாலான முக்கிய பிரபலங்கள் இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற “ஜெயிலர்” திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் பல்வேறு சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : ஜெயிலர் திரைப்படமானது மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. படம் வெற்றி பெற வேண்டும் என்பதை தவிர நன்றாக வரவேண்டும் என்பதுதான் என்னுடைய முதல் நோக்கமாக இருந்தது, இந்த கதையை எடுக்கும் போதே நான் நன்றாக எடுத்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

இந்த படத்தின் வெற்றிக்கு முழு காரணம் ரஜினி தான். அவரது பவர் மற்றும் ஆரா தான் இது போன்ற வெற்றிக்கு காரணம். இந்த படத்தில் நடிகர்கள் மட்டுமின்றி பல நபர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டி உள்ளது. அந்த வகையில் இந்த படத்திற்காக பணிபுரிந்த தொழில்நுட்ப வல்லுநர்கள், கலை இயக்குனர், ஆடை வடிவமைப்பாளர், எடிட்டர், சண்டை பயிற்சியாளர், டான்ஸ் மாஸ்டர் என பலருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அதே போன்று தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தமிழ்நாட்டையும் தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை இந்த படம் பெற்றுள்ளது. அதேபோன்று இந்த படத்தின் முதல் காட்சியை நான் படம் ரிலீசுக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே ரஜினி சாருக்கு திரையிட்டு காட்டினேன். அப்போது அவர் என்னிடம் : நான் நினைத்ததை விட பத்து மடங்கு படம் சிறப்பாக வந்துள்ளது என்று கூறினார். படம் நன்றாக வரும் என எனக்கு தெரியும் ஆனால் இவ்வளவு சிறப்பாக வரும் என்று நினைக்கவில்லை என ரஜினி கூறினார். அவர் இப்படி சொல்வார் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை இந்த படத்தின் வெற்றி எனக்கும் மகிழ்ச்சி அளித்திருக்கிறது என நெல்சன் தெரிவித்தார்.





