கடந்த 2017ம் ஆண்டில் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான படம் குரங்கு பொம்மை. இந்த படத்தில் பாரதிராஜா விதார்த் தேனப்பன் குமரவேல் இளங்கோ பாலாசிங் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படமாக இது அமைந்தது.
இந்த படத்தில் தனது நண்பன் மற்றும் விசுவாசியான பாரதிராஜாவிடம் விலை உயர்ந்த சிலைகளை தந்து அனுப்புகிறார் அவரது முதலாளி தேனப்பன். பாரதிராஜாவை தனது வீட்டுக்கு வரவழைத்து அந்த சிலைகளை வாங்கிக்கொள்ளும் குமரவேல், பாரதிராஜா தன்னை பார்க்க வரவே இல்லை என்று சாதிப்பார்.
அதே நேரத்தில் தன் வீட்டில் தங்கியிருக்கும் பாரதிராஜாவை கொலை செய்து அவரது தலையை குரங்கு பொம்மை போட்ட ஒரு பெரிய பேக்கில் வைத்து விடுவார். கடைசியில் பல இடங்களுக்கு பயணிக்கும் அந்த பேக், கடைசியில் பாரதிராஜாவின் மகன் விதார்த் கைக்கே வந்து சேருவதுதான் இந்த படத்தின் கதை.
மிகப்பெரிய திரில்லர் படமாக இருந்த குரங்கு பொம்மை படம் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்ற நிலையில், அதற்கு பிறகு 7 ஆண்டுகளாக எந்த படமும் நித்திலன் சுவாமிநான் இயக்கவில்லை. கடந்த ஆண்டில் அவரது இயக்கத்தில் வெளியான 2வது படம் விஜய் சேதுபதி நடித்த 50வது படம் மகாராஜா படமாக அமைந்தது. இது மாபெரும் வெற்றிப் படமாக இருந்தது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் நித்திலன் சாமிநாதன் கூறியதாவது, நான் இயக்கிய குரங்கு பொம்மை மகாராஜா படங்கள் எல்லாம் திரில்லர் ஸ்டராங்க் மெசேஜ் படங்களாக இருந்தன. குரங்கு பொம்மை படத்தை முடித்த பிறகு ஒரு காதல் படம் பண்ணும் ஐடியா எனக்கு வந்தது.
அந்த ஐடியா வந்த ஒரே வாரத்தில் அதை தூக்கி போட்டுட்டேன். ஏனென்றால் அந்த ஐடியாவை ஒர்க் பண்ணி எழுதி பார்த்தேன். கேவலமாக இருந்தது. காதல் படம் எனக்கு செட் ஆகல என்று நித்திலன் சுவாமிநாதன் கூறியிருக்கிறார். காதல் படம் இயக்கும் ஆசை வந்தும் அதை தூக்கி எறிந்து விட்டதாக வெளிப்படையாக அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.





