நடிகர் பார்த்திபன், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக இருக்கிறார். நல்ல படங்களை இயக்கி வருகிறார். பல வெற்றிப்படங்களை தந்து ரசிகர் மனங்களை கவர்ந்தவர். புதிய பாதை படம்தான் இவரது முதல் படம். ஆனால், அதற்கு முன்பே, தாவணிக்கனவுகள் படத்தில் நடிகர் திலகம் சிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பை, அவரது குரு கே. பாக்யராஜ் தந்திருந்தார்.
புதிய பாதை படம், தமிழ் சினிமாவில் இவருக்கு புதிய பாதை வகுத்து தந்தது. அதே வேளையில், அந்த படத்தின் நாயகி சீதாவை, வாழ்க்கை பயணத்தில் இணைத்துக்கொள்ள, அங்கு அவருக்கு குடும்ப பாதையும் மாறியது. ஆனால், ஒரு கட்டத்தில், சீதா, பார்த்திபன் மண வாழ்க்கையில் மனமுறிவு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
குடும்ப வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சந்தித்தாலும், பார்த்திபனின் திரைப்பயணம் தொடர்கிறது. சமீபத்தில் அவரது ஒத்தச்செருப்பு, இரவின் நிழல் போன்ற படங்கள் பேசப்பட்டன. இதற்கிடையே எதையுமே வித்யாசமாக யோசிக்கும் பார்த்திபன், நேற்று கார்த்திகை தீப திருவிழா கொண்டாடிய மக்களுக்கு தனது பாணியில் ஒரு வாழ்த்தை பதிவு செய்திருந்தார்.
அதில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு உங்கள் வீட்டில் பிள்ளைகள் விளக்கேற்றாமல் இருந்தால், அவர்களை நடுக்கூடத்தில் அமர வைத்து சிரிக்கச் சொல்லுங்கள். எண்ணெய், திரி, விளக்கு, தீக்குச்சி எல்லாம் மிச்சமாகும் என பதிவிட்டு இருந்தார். இதை பார்த்து கடுப்பான பலரும், பதில் பதிவுகளில் காரசாரமான கமெண்டுகளை பதிவிட மிரண்டு போன அடுத்து அந்த பதிவை அகற்றி விட்டார்.
அடுத்த பதிவில், மன்னிக்க நண்பர்களே, குழந்தைகளின் சிரிப்பு விளக்கை போல பிரகாசமானவை என்று சொல்ல நான் முற்பட்டதன் விளைவு சில பக்தர்களின் மனதை அது புண்படுத்தியிருப்பதை அறிகிறேன். எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை. அதற்குள் மதம் எல்லாம் வருகிறது. இனிமேல் கவனமாக பதிவிடுகிறேன் என்று கூறி, அந்த பதிவில் தன் வீட்டில் தீபம் ஏற்றிய ஒரு புகைப்படத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.
சமீபத்தில் மன்சூர் அலிகான், கிண்டலாக பேசுவதாக நினைத்து திரிஷா குறித்து பேசியது வைரலாகி, போலீசில் வழக்குப்பதிவு செய்யும் அளவுக்கு போயிருக்கிறது. இதில் கருத்து கந்தசாமியாக மாறி, பார்த்திபன் செய்த இந்த பதிவு, அவருக்கும் ஆப்பு வைத்திருக்கும். ஆனால், சுதாரித்துக்கொண்ட பார்த்திபன், பதில் பதிவில் சமாதானம் பேசி தப்பித்திருக்கிறார்.





