தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு எப்படிப்பட்ட செல்வாக்கு இருந்தது என்பது சொல்லித் தெரியவில்லை. கடந்த 1987ம் ஆண்டில் அவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார். ஆனால் 37 ஆண்டுகள் ஆகியும் அவரது பெயரை சொல்லிதான் இப்போதும் அரசியல் செய்துக்கொண்டு இருக்கின்றனர்.
நடிப்பிலும் அரசியலிலும் ஒரு தன்னிகரற்ற சிறந்த மனிதராக விளங்கியவர் எம்ஜிஆர். உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு எல்லாம் வாரி வழங்கிய அவரது குணத்தை பார்த்து பொன்மனச் செம்மல் என்றும் மக்கள் அவரது புகழ்பாடினர். சினிமாவில் மக்கள் திலகம் என்றும் அரசியலில் புரட்சித் தலைவர் என்றும் மக்கள் அவரை கொண்டாடினர்.
ஒருமுறை மக்கள் திலகம் எம்ஜிஆர் சென்னையில் இருந்து மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கிராமம் வழியாக கார் சென்று கொண்டிருந்தபோது நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் எம்ஜிஆர். அந்த வழியாக வருவதை தெரிந்து கொண்டு அவரது காரை நிறுத்துமாறு சைகை செய்தனர். ஒருவழியாக காரையும் நிறுத்தி விட்டனர்.
காரில் இருந்து இறங்கிய எம்ஜிஆர், அவர்களை சந்தோஷமாக பார்த்து என்ன வேண்டும் உங்களுக்கு, எதற்காக என் காரை நிறுத்தச் சொன்னீர்கள்? உங்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டுமா என்று அன்போடு கேட்டிருக்கிறார். அந்த கிராம மக்கள், அருகில் உள்ள தங்களது வயலில் எம்ஜிஆர் வந்து ஒரு முறை நடந்துவிட்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
எதற்கு அவ்வாறு செய்ய வேண்டும் என்று எம்ஜிஆர் கேட்டதற்கு, கடந்த பல ஆண்டுகளாக மழை பொய்த்துப் போய்விட்டது. எங்கள் நிலம் எல்லாம் தரிசாக மாறிவிட்டது. நீங்கள் ஒரு முறை அந்த வயலில் நடந்து சென்றால் வயலில் விவசாயம் மீண்டும் துளிர்விடும் என்று நம்புவதாக அவர்கள் கூறியிருக்கின்றனர். இதைக் கேட்டு வியப்படைந்த எம்ஜிஆர், மக்களின் நம்பிக்கையை ஏமாற்ற வேண்டாம் என்று அதற்கு சம்மதித்துள்ளார். தனது காலணிகளை காரிலேயே விட்டுவிட்டு வயலில் தன் வெறுங்கால்களுடன் ஒரு சுற்று நடந்து வந்து பின் காரில் ஏறி பயணத்தை தொடர்ந்திருக்கிறார்.
சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அதே வழியில் எம்ஜிஆர் காரில் வந்த போது அந்த பழைய சம்பவம் அவர் நினைவுக்கு வந்திருக்கிறது. அதனால் அதே இடத்தில் காரை நிறுத்தி தன்னை நடக்க சொன்ன அந்த வயல்வெளிகளை அவர் பார்வையிட்ட அவர் ஆச்சரியப்பட்டு போய் விட்டார். வயல்வெளிகள் எல்லாம் பச்சை பசேல் என காணப்பட்டிருக்கிறது. எம்ஜிஆர் அங்கு வந்த தகவல் அறிந்த கிராம மக்கள் எல்லாம் ஓடி வந்து எம்ஜிஆரை மனதார வாழ்த்தி இருக்கின்றனர்.





