நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் குட் பேட் அக்லி. கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி இந்த படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பிறகு தனது அடுத்த படத்தில் நடிக்க நேரம் ஒதுக்காமல் 10 மாதங்களுக்கு தொடர்ந்து பல நாடுகளில் நடக்கும் கார் ரேஸில் கலந்துக்கொள்ள அஜீத்குமார் சென்றுவிட்டார்.
மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன்தான் அஜீத்குமார் நடிக்கும் 64வது படத்தை இயக்க உள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த படத்தை தயாரிக்கிறார். வருகிற நவம்பரில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே அஜீத்குமார் நடிக்கும் அடுத்த படம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இது ஒருவேளை ஏகே 64க்கு பிறகு உருவாகும் படமாக இருக்கலாம்.
மலையாள நடிகர் உன்னிமுகுந்தன் நடிப்பில் இயக்குனர் ஹனீப் அடேனி இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான படம் மார்கோ. இந்த படம் வன்முறை கதைக்களத்தில் உருவாகி இருந்த போதிலும் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது இந்த படத்தின் நாயகன் உன்னிமுகுந்தன் பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிக்க கமிட் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மார்கோ படத்தை இயக்கிய இயக்குனர் ஹனீப் அடேனி இயக்கத்தில் அஜீத்குமார் நடிக்க ஒரு வாய்ப்பு உருவாகி உள்ளது. வாரிசு மற்றும் கேம் சேஞ்சர் போன்ற படங்களை தயாரித்தவர் தெலுக்கு தயாரிப்பாளர் தில் ராஜூ. அவர் சமீபத்தில் நடிகர் அஜீத்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திராவை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.
அப்போது மார்கோ பட இயக்குனர் ஹனீப் அடேனி தன்னிடம் ஒரு கதை சொன்னதாகவும் அது சிறந்த படமாக வரும் என்றும் கூறிய அவர், அந்த படத்தில் அஜீத்குமார் நடித்தால் மிக சிறப்பாக இருக்கும். பெரிய வெற்றியை கொடுக்கும். அந்த படத்தை நானே தயாரிக்கிறேன். நீங்கள் அஜீத்குமாரிடம் இதுபற்றி பேசுங்கள் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் அதே நேரத்தில் அஜீத்குமாரின் சம்பளம் ரூ. 100 கோடி மட்டுமே தர முடியும் என்றும் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். ஏற்கனவே ரூ. 186 கோடி சம்பளம் கேட்கும் நடிகர் அஜீத்குமார் ரூ. 125 கோடி சம்பளத்துக்கு சம்மதிக்க மறுத்திருக்கிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜூ ரூ. 100 கோடி சம்பளம் தருவதாக கூறியது சுரேஷ் சந்திராவை அதிருப்தியடைய செய்துள்ளது. எனினும் அஜீத்குமாரிடம் கலந்து பேசிவிட்டு சொல்கிறேன் என்று மட்டும் கூறிவிட்டு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.





